சற்றுமுன்

உலக மலேரியா தினம் ஏப்ரல் 25

மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். அனாபிளஸ் என்ற கொசு நம்மை கடிப்பதன் மூலம் ப்ளாஸ்மோடியா என்ற கிருமி நம்முடைய இரத்தில் சேர்வதால் மலேரியா நோய் ஏற்படுகிறது. அதன் பிறகு காய்ச்சல், தலை லேசாக சுற்றுதல், வாந்தி, சுவாசித்தலில் ஏற்படும் சிரமம், கடுங்குளிர் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த நோயின் தீவிரத்தால் மரணம் கூட ஏற்படலாம். இந்த கிருமிகள் குறிப்பா இரத்தத்தின் சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. இதன் அறிகுறிகள் சில நாட்களில் நம் உடலில் ஏற்படும் மாற்றத்தால் உணரமுடியும்.

மலேரியா தடுப்புமருந்துகள் கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஆனாலும் முழுவதுமாக குணப்படுத்தக்கூடிய தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. பெரும்பாலும் மலேரியா நோயானது திடீர் காலநிலை மாற்றத்தின் போது தான் அதிகமாக பரவுகிறது.

நோய் பரவாமல் தடுப்பதற்கு கொசுக்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும். கொசுக் கடித்தலை முற்றிலுமாக தடுத்தல் வேண்டும். கொசுக்களை ஒழிக்க பூச்சி மருந்தை வீட்டில் தெளியுங்கள். கொசுக்கள் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லாமல் இருப்பதன் மூலமாகவும், தேங்கி நிற்கும் தண்ணீருக்கு பக்கத்தில் நிற்காமல் இருப்பதன் மூலமாகவும் மற்றும் வீடுகளை சுற்றியுள்ள புதர்களை அகற்றுவது மூலமாகவும் இந்த நோய்யை கட்டுபடுத்தலாம். வீட்டுக்கு பக்கத்தில் கொசு உற்பத்தியாகும் இடங்கள் இருந்தால் அதை சுத்தப்படுத்துங்கள். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்கள் அல்லது தொட்டிகளை மூடி வையுங்கள். கொசு வலையும் பயன்படுத்தலாம்.
வந்தபிறகு மலேரியா நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விட மலேரியாவின் தாக்கம் அதிகமாகவதற்கு முன்னதாகவே சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் பல உயிர்களைக் காப்பாற்றலாம்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும். மலேரியாவால் இறப்பவர்கள் எண்பது சதவிதம் பேர் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் என்று புள்ளி விவரங்கள் சொல்லுகிறது. முடிந்தளவு கை கால்கள் மூடும் வண்ணம் ஆடை அணியலாம். தூங்கும் போதும் படிக்கும் போதும் கொசு வலையை பயன்படுத்தலாம். இது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிபெண்களுக்கு மிக மிக முக்கியம்.

ஒவ்வொரு வருடமும் 250 மில்லியன் நோயாளிகள் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தோராயமாக ஒரு மில்லியன் நோயாளிகள் இறப்பதற்கும் மலேரியா காரணமாக இருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகிறது. உலகம் முழுவதும் சுமார் நூறு நாடுகளுக்கு மேல் மலேரியாவின் ஆபத்து இருக்கிறது.

எனவே மலேரியா நோயை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக "உலக மலேரியா தினம்" அனுசரிக்கப்படுகிறது

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.