சற்றுமுன்

மனித மூளையின் ரகசியம்

கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில் தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தோம்.

மூளை ஒரு பெரிய ‘அக்ரூட்’ பழம் போல் இருக்கும். ஈரம் நிறைந்த அழுக்கு கலரில் இருக்கும். இதற்குள் தான் இத்தனை சூட்சுமம் இருக்கிறது.

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் மனித மூளை. அதில் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும், சிறிய மணல் துகள் அளவுக்கு பெரிதாக்கினால் நமது மூளையில் உள்ள செல்களை நிரப்ப ஒரு லாரி போதாது.

இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூட்ரான்கள், நரம்பு செல்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம் தான், நமது சிந்தனை. மனிதன் உயிர் வாழும் வரை இந்த செல்களிடையே மின் துடிப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

இன்றைக்கு இருக்கும் கம்ப்யூட்டரோடு மூளையை ஒப்பிட்டால், மூளை மிக மெதுவாக செயல்படும் ரகம்தான். சராசரியாக மூளை 1.5 கிலோ எடை கொண்டது.

ஆனால் இந்த மூளை அமைப்பு ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. ஆணை விட பெண்ணின் மூளையை அளவில் ஒப்பிடும்போது குறைவுதான். காரணம் பெண் இயற்கையாகவே ஆணைவிட குறைவான உடலை கொண்டு இருப்பவர்கள்.

மூளையின் அளவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பு இல்லை. அப்படி இருந்தால் எஸ்கிமோக்கள்தான் இன்று உலகிலேயே புத்திசாலிகளாக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் மூளை பெரியது. மிகவும் புத்திசாலித்தனமாக எழுதக்கூடிய அனடோல் பிரான்ஸ் என்ற எழுத்தாளருக்கு மிகவும் சிறிய மூளைதான் இருந்தது. அதே நேரத்தில் உலகிலேயே மிகப்பெரிய மூளை ஒரு முட்டாளுக்குத்தான் இருந்து இருக்கிறது.

யானையின் மூளை நம்மைவிட மூன்றரை மடங்கு அதிகம். ஆனால் அதன் உடலோடு ஒப்பிட்டால் குறைவு. மனிதனின் உடலில் மூளை 2.5 சதவீதம் நிறைந்து இருக்கிறது. இதுவே யானைக்கு வெறும் 0.2 சதவீதம்தான் உள்ளது. அதனால்தான் இந்த சின்ன மனிதன் ஆட்டுவிக்கிறபடியெல்லாம் அவ்வளவு பெரிய யானை ஆடுகிறது.

மனித மூளை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிறக்கும்போது இருக்கும் அளவை விட பருவ வயதில் மூன்று மடங்கு அதிகமாகிறது. இளமை முடிந்து தலை நரைக்கும்போது, மூளையின் எடையும் குறையத் தொடங்கி, வருடத்திற்கு ஒரு கிராம் என்ற அளவில் குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை அதிக எடை கொண்ட மனித மூளை 2 கிலோ 49 கிராம் என்ற அளவில் இருந்தது. சராசரி மனிதனின் மூளை ஒரு கிலோ 349 கிராம் என்ற அளவிலே இருக்கும்.

மூளையின் அடர்த்தி, அதில் உள்ள மடிப்புகள், பாலம் பாலமாக கசங்கி போய் இருப்பதுதான் புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கிறது. மூளை, முதுகுதண்டில் இருந்து முளைக்கிறது.

முட்டைக்கோஸ் அல்லது வெங்காயம் போலத்தான் தோல் அடுக்குகளாக மூளை வளர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி அடுக்காக போர்வை போல் மூளையை போர்த்தி இருக்கும் பகுதியை ‘கார்டெக்ஸ்’ என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

இந்த அடுக்கு சுமார் நாலரை மில்லி மீட்டர் தடிமன் கொண்டது. இதில் மட்டும் 800 கோடி நரம்பு செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே பிரமிப்பான இணைப்பு இருக்கிறது. ஒரு கன அங்குலத்துக்குள் 16 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட மிக நுட்பமான நரம்பு இணைப்புகள் உள்ளன.

சிந்தனை, கற்பனை சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களும், இந்த ‘கார்டெக்ஸ்’ பகுதிகளில் நிகழ்வதால்தான் இத்தனை நெருக்கமான அடர்த்தி. ஆனால், இன்னமும் மூளையின் ரகசியம் நமது விஞ்ஞானிகளுக்கு முழுமையாக பிடிபடவில்லை என்பதுதான் உண்மை.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.