சற்றுமுன்

நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை

இரக்க குண பெண்மணி ஒருத்தி ...
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...
அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.
ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.
அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."
தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.
'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....
மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.
வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.
அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.
வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.
"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.
இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!
'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது

a tamil short story about tamil culture

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.