நான்கைந்து வருடங்களாக தமிழில் தொலைந்துபோன மாதவனை, ‘இறுதிச்சுற்று’ மூலம் மீட்டுக்கொண்டு வந்தார் சுதா கொங்கரா. அந்தப் படத்தின் மூலம் அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானதே தவிர, குறையவில்லை. தற்போது புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்து வருகிறார் மாதவன். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்நிலையில், சுதா இயக்கும் அடுத்த படத்திலும் மாதவனே நடிக்கலாம் என்ற தகவல் அடிபடுகிறது. வெங்கடேஷை வைத்து தெலுங்கில் ‘இறுதிச்சுற்று’ ரீமேக்கை எடுத்த சுதா, தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி முடித்துள்ளவர், இந்தப் படத்திலும் பெரிய ஹீரோ ஒருவர் தான் நடிக்கிறார் எனத் தெரிவித்துள்ளார். அந்தப் பெரிய ஹீரோ மாதவன் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.