சற்றுமுன்

விட்டில் பூச்சிகள் - ரோசி கஜன் - சிறு கதை - குறுநாவல்

“என்னடாமச்சான்!உண்மையாகவா சொல்கிறாய்?!”ஆச்சரியமாகக் கேட்டான் வேந்தன். 
“பின்னபொய்யா சொல்கிறான்!” இடையிட்ட அடுத்தவன், “என்ன திடீரென்று! ஊரில் பெண்பார்த்து வைத்துள்ளார்களா?” தன்பங்குக்குகேள்வியொன்றை ஊதிவிட்டான்.
“அம்மா, அப்பா யாருக்காவது உடம்பு சரியில்லையா அருள்?”கைபேசியில் எதையோ தட்டிக் கொண்டிருந்த மூன்றாமவன், ‘என் செவிகளும் உங்க பேச்சில்!’ என்றுணர்த்தினான்.
“நேற்றிரவு அவன் அம்மா கதைத்தார் என்று நினைக்கிறேன்; அப்போதிருந்து ஒருமாதிரித்தான் இருக்கிறான். வாய் திறந்தால் தானே!” மிகவும் சலித்துக்கொண்டான் நான்காமவன்.
தன்னைச் சுற்றிலும் எழுந்தநண்பர்களின் கேள்விகளுக்கு அருளின் பதிலோ,வழமையானமௌனம்!
ஆனால், வழமைக்கு மாறாக அவன்முகம் பாறையாகிக் கிடந்ததை அவதானித்தார்கள் நண்பர்கள்.
   ‘காலையில் சாப்பிட்டானோ தெரியாது; மதியமும்ஒழுங்காகச் சாப்பிடவில்லை. ஒருநாளும் இல்லாத கணக்கில் ஃபோனும் கையுமாகத்திரிந்தான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குது! என்னவாகஇருக்கும்!’ வேந்தனின் மனம் அறியும் ஆவலில் அலைந்தது.
   “கொஞ்சம் வெளியில் போய்ட்டுவாறேன்.” அவர்களின் கேள்விகளை காதில் வாங்காதவன் போன்று,அச்சிறுவரவேற்பறையைக் கடக்க முயன்றவனை,எட்டிப் பிடித்து நிறுத்தினான் வேந்தன்.
   “ஏன்டா மச்சான், ஒரு வருடம் இரண்டு வருடமா?கிட்டத்தட்ட ஐந்துவருடங்கள் ஒன்றாக இருக்கிறோம்! உன் பிரச்சனைகளைஎங்களிடம் சொன்னால் குறைந்தா போய்விடுவாய்!”அக்கறையும் அங்கலாய்ப்புமாகக் கேட்டவன், அருளின்மரத்த முகத்தைப் பார்த்து மிகுந்த எரிச்சல் கொண்டான்.
  ‘என்ன பிறப்போ!’ இரண்டாமவன் மனதில் கடுகடுத்தபடி, “பச்..விடுடா மச்சான்; எப்படிக் கேட்டாலும் அவன் வாய் திறக்கப் போவதில்லை. விடு விடு.” எழுந்து,குளியலறைக்குள்மறைந்தான்.
   “அவனவன் நல்லநண்பன் கிடைக்கமாட்டானா என்று ஏங்குவான்கள்; இங்கு, இவனைச் சுற்றி நான்குதடியன்கள் இருக்கிறோம்! எப்படித்தான் நெருங்க நினைத்தாலும் தனக்குத்தான் குடும்பமும் பொறுப்பும் சுமையும் என்பதுபோலபடம் போட்டுக் கொள்வதில் இவனைக் கேட்டுத்தான்!” சத்தமாகவே முணுமுணுத்தான்மூன்றாமவன்.
   “அதுதானே மச்சான்; எங்களுக்கும் தான் தலைக்கு மேலே பொறுப்பிருக்கு!அதற்கென்று உன்னைப் போலவா?!” நான்காமவன் குரலில்ஏகத்துக்கும் கேலி!
 “டேய் விடுங்கடா; அவனுக்கு எதையும் நம்மிடம் சொல்லப் பிடிக்காது. என்னதான் ஒன்றாக இருந்தாலும் கோடு போட்டு நம்மைத் தள்ளி வைத்திருக்கிறான். அது விளங்காது நீங்களும்...பச்...உங்களுக்கு வேறு வேலையே இல்லையா?”தொடர்ந்து சலித்துக்கொண்டவன், விருட்டென்று பக்கத்து அறையினுள் நுழைந்தான்.
தன்னையேபார்த்திருந்த மிகுதி இருவரையும் அமைதியாகஒருபார்வை பார்த்துவிட்டு சட்டென்று வெளியேறிய அருள், முன்வாயில் கதவு மூலையில் இருந்தகாலணிகள்வைக்கும் சிறு இரக்கிலிருந்துதன் சப்பாத்துகளை எடுத்தான்.
   அவன் ஸ்பரிசம் பட்டதும் மெல்ல விழித்துக் கொண்ட சப்பாத்துகள் இரண்டும், “நன்றாகத் தளர்ந்துபோனோம்; எங்களை விட்டுவிடேன்!” கண்ணீரோடு முனக, அதைச் சிறிதும் உணராது கீழே போட்டவன்,அவசரமாக கால்களை அவற்றுள் திணித்தான்.
   “மச்சான் கொஞ்சம் நில்லுடா.” பின்தொடர்ந்து வந்தான் வேந்தன்.
இருவருக்குள்ளும்சில வருடங்கள் வயது வேறுபாடு இருந்தாலும், இங்கு வந்தபின் நண்பர்களாகப் பழகியதில் வயது வேறுபாட்டை மறந்திருந்தனர்.
   “இன்றைக்குசாந்தன் அண்ணாவின் மகனுக்கு பத்தாவதுபிறந்தநாள்; மறந்து போனாயா? ஒரு ஆறு மணி போல எல்லோரும்போவோம். அவர் எப்போதுமே ருசியானசாப்பாடு போடுவார்.” சொன்னவன் வாயில்,உணவின் நினைவில் எச்சில் ஊறியது.
வெளிநாட்டில், அதுவும்பிரமச்சாரிகள்பெரும்பாலும்வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கிக் கிடப்பார்கள் அல்லவா?
எப்போதாவதுதான்,ஊர் ருசிக்குஏங்கும் நாவைத்திருப்தி செய்யும் வகையில் உணவுகளும் அமையும்.
அப்படி அமையும் சந்தர்ப்பங்களில் ஒன்று சாந்தன் வீட்டு விழா!
உணவுப் பிரியனான சாந்தன் அழைப்பவர்களுக்குவஞ்சனையில்லாது சுடச்சுட உணவுகள், குடிவகைகள் என்று கடைபரப்பிஅசத்திவிடுவான்.
 அதையாராவது தவற விடுவார்களா?
“நீயும் வருவாய்தானே அருள்?”பத்துவருட,பழைய கருப்பு குளிர்கோட்டை மாட்டிக்கொண்டு வெளியேறியவனைகேள்வியால் தயங்கச் செய்தான் வேந்தன்.
“பச்... நான் வரவில்லை; நீங்க போயிட்டு வாங்க. என் பங்குக்குபத்து யூரோடிவிக்கு அருகில் வைத்திருக்கிறேன்.” சலித்தவன்,நண்பனின்பதிலுக்குக் காத்திருக்கவில்லை.
   விருட்டென்று வெளியேறும் நண்பனை, இப்போது, கோபமும் எரிச்சலுமாகப் பார்த்தான் வேந்தன்.
   “என்ன ஜென்மமடா இவன்! வெளிநாடு வந்து பத்து வருடங்கள்இருக்கும்!ஏழுநாட்களும் மாடா உழைக்கிறான்.கிளீனிங் வேலை என்றால் இளப்பமா?கைநிறைய வருமானம் வருகுதே!ஆனாலும்,அநியாயத்துக்கு இப்படிக் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.
உழைக்க உழைக்க காசை ஊருக்கு அனுப்பி மாளிகை கட்டி இருக்கிறானாம்.இவனா போயிருக்கப் போகிறான்.சரி சரி; குடும்பத்துக்குச் செய்யத்தான் வேண்டும். அதற்காக, இவன் பீத்தல் பறங்கி போலவா வாழவேண்டும்!நல்லதாக உடுத்தி, சாப்பிட்டு பச்.. நாளைக்கு உனக்கு என்று எதையும் சேர்த்து வைக்க வேண்டாம்.
இவனோடு வந்தராசு அண்ணாவை பார்; சொந்த வீடு வாங்கிகல்யாணமும் செய்திட்டார். இவனைப் போல நான் மட்டும் உழைத்தால் இப்படியாஇருப்பேன். ஐந்துபேர் இருக்கும்முட்டுவீட்டில்...தகதிமிதோங் போட்டுக் கொண்டிருப்பேனா?!” தன்பாட்டில்மூச்சுவிடாது அங்கலாய்த்தவேந்தனை, நகைப்போடுஏறிட்டார்கள் மற்றைய மூவரும்.
“டேய்!டேய்! அருளை உன் தங்கச்சிக்குசெய்ய நினைத்தாய்;மிகவும் நம்பிக்கையாகக் கேட்டும் பார்த்தாய்;அவன் பிடி கொடுக்கவில்லைஎன்றதும் சந்தர்ப்பம் கிடைத்தால் இதுதான்சாட்டென்றுமென்று துப்புகிறாய்!” முதுகில் அடித்தான் ஒருவன்.
   “போடா;அப்படியில்லையடா! அருமையான பெடியன் என்று கேட்டேன் தான். உனக்கொருதங்கச்சிஇருந்திருந்தால் நீ விட்டா இருப்பாய்?” முறைத்தான் வேந்தன்.
   “அவனும்,‘இப்போ கல்யாணம் செய்யும் எண்ணம் இல்லை; பெரியதங்கச்சியின்  கல்யாணம் முடியவேண்டும். சின்னவளுக்கும் சரிவந்தால் முடித்துவிட்டுத்தான்’ என்றான்; நானும் விட்டு விட்டேன்.” தொடர்ந்து சமாளித்தான்.
   ‘என்தங்கைக்கு மாப்பிள்ளை என்றதும் கண் முன்னால் இருந்த அவனைக் கேட்டுப் பார்க்கவில்லையா? அவனும் தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கிறான் தானே; என்னை நிஷாவுக்கு செய்தால் என்னவென்று அவனுக்குத் தோன்றவில்லையே!’வேந்தனின் அடிமனதில் துளியாக விழுந்த ஏக்கம், சிறுகச் சிறுக வளர நினைக்குதே!
சின்னவயதிலிருந்து ஒரேதெருவில் கண்முன்னால் நடமாடிய நிஷா, இப்போதெல்லாம் இவன் கனவுகளிலும் தலைகாட்டுவதை இவன் மறந்தும் வெளியில் கசியவிடவில்லை.
   “நீ பார்த்துக் கொண்டேயிரு மச்சான், இப்போ அவனுக்கு முப்பத்திமூன்று; ஐம்பது வயதானாலும் இவன் கல்யாணம் செய்யமாட்டான்.” மற்றவர்களைவிட, ஒரே தெருவில் வசிக்கும் வேந்தனும் அருளும்நெருக்கம் அதிகம். அருளின் குடும்பம் பற்றி மிகவும் நன்றாகத் தெரிந்திருந்ததால் ஆதங்கத்தில் முணுமுணுத்தான் வேந்தன்.
    “டேய் ஏன்டா இப்படிப்புலம்புகிறாய்? ஹ்ம்ம்... அருமையான பெடியன் அருள்; முயன்று உன் தங்கச்சிக்குசெய்யப் பார். ஊரில் அவர்கள் வீட்டுக்குக் கிட்டத்தானே உங்க வீடும்;உன் அம்மா அப்பாவை போய்ப் பேசச் சொல்லேன்.”
   “பச்! அருள் நல்லவன் தான்; அவன் அப்பா பற்றி உனக்குத் தெரியாது மச்சான்; வம்பு பிடித்த ஆள். கூடவேவரட்டுக் கௌரவம்.அதுமட்டுமா? ஒரு இடக்கு முடக்கான ஆள். இவன்சம்மதித்தால்ஒருவேளை அவர்களும் சம்மதிப்பார்கள் என்றுதான் கேட்டுப் பார்த்தேன்.என் அம்மா அப்பா பேசப் போனால் அது இது என்று சொல்லி இன்னொரு வீடு கட்ட என்னிடமிருந்து காசு பறித்து விடும் அந்த மனிஷன்.” ஏளனமாகப் பழித்தான் வேந்தன்.
   “என்தங்கச்சிக்கே என்றாலும் கொடுப்பதற்கும்ஒரு அளவு இருக்குதானே மச்சான்;நாளைக்கு என்வாழ்வையும் பார்க்க வேண்டுமே! அதனால் தான் பேசாமல் விட்டு விட்டேன்.” என்று நகர்ந்தவனை பேச்சற்று நோக்கினார்கள் நண்பர்கள்.
   “சும்மா சொல்லக் கூடாதுடா வேந்தன்; நீயும் நல்ல காரியவாதிதான்.பிழைத்துக் கொள்வாய்!”அவர்களின் ஒருவன் முணுமுணுத்தான்.
   “மாடாகக்கஷ்டப்பட்டுத்தோட்ட வேலை செய்து உழைக்கிறேன் மச்சான். என்னதான் பழகினாலும், குளிருக்குள்ள தோட்ட வேலைசெய்வது எவ்வளவு கஷ்டமென்று நான் சொல்லியா உனக்குத் தெரிய வேண்டும்.ஆற்றில போட்டாலும் அளந்து போடவேண்டும் என்ற கொள்கைதான் எனக்குப் பிடிக்கும்.” அறையிலிருந்தே குரல் தந்தான் வேந்தன்.
   “ம்ம்ம்..ஏதோநீ சொல்வதும் சரிதான்! ஒத்தசதம் என்றாலும் கஷ்டப்பட்டு உழைத்துப் பார்த்தால் தான் அருமை புரியும்.” ஆமோதித்தான், இவனைக் காரியவாதி என்ற நண்பன்.
   “சரி,அருள்வரவில்லை என்றால் பழசை சாப்பிட்டுவிட்டு இருக்கட்டும்;ஆறு மணிவாக்கில பிறந்த நாள் வீட்டுக்குப் போயிட்டு வருவோம்.” முடிவெடுத்தவர்கள், தத்தம் வேலைகளில் மூழ்கினர்.
ஒன்றாக இருக்கும் நண்பர்களின் மனத்தாங்களுக்குப் பாத்திரமான அருள், அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லவே இல்லை.
மனம் என்ற ஒன்று இருக்கின்றதா? அவனுக்கே சந்தேகம் தரும்வகையில் நெஞ்சாங்கூடு வெறுமையை உணர்ந்தது.
தொண்டைவரை முட்டிய கயர்ப்பு, அவன் வாழ்வை; இத்தனைவருட கடின உழைப்பை;  உடன் பிறப்புகள் என்று துடிக்கும் அவனின் பாசம் கொண்ட மனதை எள்ளி நகையாடியது.
   கோபமும் ஆத்திரமும் வெறுப்பும் கட்டிப்பிடித்து ஆக்ரோஷமான கைகலப்பில் ஈடுபட்டிருக்க, இயந்திரமாகச் செயல்பட்டு,திட்டமிட்டபடிவெளிஅலுவல்களை முடித்தவன், சில பொருட்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப, நண்பர்கள் பிறந்தநாள் வீடுசென்றிருந்தார்கள்.
வெறிச்சென்றிருந்த வீடு,ஏதோ ஒருவகையில் அவன் மனதை வருடியது.
 தேவையற்றகுடைச்சல்கேள்விகள், பார்வைகள்,முணுமுணுப்புகள்இருக்காதே!
   இருசிறு அறைகள்; சிறு வரவேற்பறை;இருவர் நின்றால் முட்டிக் கொள்ளும் அளவில் சமையலறையும் அதோடு சேர்ந்த சிறு பால்கனியும்; குளியலறை கழிப்பறைஎன இருசதுரங்கள்; இதே கட்டிடத்தில் சாமான்கள் போடும் நிலக்கீழ் அறை;இதுதான் இந்த ஐந்து பேருக்குமான உறைவிடம்.
ஒருவர் பங்குக்கு மாதம் ஐம்பது யூரோ வாடகையில்அரசமாடிக் குடியிருப்பு! தண்ணீர் மின்சாரம் அனைத்தும் இந்த ஐம்பதுக்குள் அடக்கம்.
  இடப்பற்றாக்குறை மிகையாகவேஉண்டென்றாலும்,எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நிற்பது மிக அபூர்வம் என்பதால்,ஐவரும் சமாளித்துக் கொண்டார்கள்.பகல் இரவு வேலை என வேலைநேரம் வெவ்வேறாக இருப்பதால் இடவசதியின்மை பெரிதாகத் தாக்கவில்லை.
ஏழுநாட்களும்வேலைசெய்யும் இவனுக்கு,அதிஷ்டவசமாகஇன்று சனிக்கிழமை வேலை இருக்கவில்லை.
 நேற்றிரவு வேலையால் வந்தவனை அழைத்திருந்தார் இவன் அன்னை.
   “என்னம்மா இந்த நேரம்! அங்கே எத்தனை மணி?”
   “பன்னிரண்டு ஆகுதய்யா!” தாயின் குரலின் வேறுபாட்டில் இவன்நெற்றிசுருங்கியது.
    “ம்மா!ஏதாவது பிரச்சனையா? இவ்வளவு நேரம் முழித்திருந்தால் வருத்தம் வராமல் வேறு என்னம்மா வரும்? பிறகு, தலைசுத்துது;நெஞ்சுக்க நோகுது என்று புலம்புங்கோ.” அன்னை என்றால் இவனுக்கு எப்போதும் விசேஷம்; கோபப்பட்டான்.
“நித்திரை முழித்துத்தானாவருத்தம் வரவேண்டும் தம்பி?பெற்றபிள்ளைகள் செய்யும் கூத்துகளிலும் நெஞ்சு நின்று போகும்.”அன்னையின் குரலின் வறட்சி, இவனை மிகவும் தொல்லை செய்தது.
   “என்னமா நடந்தது? அக்கா வந்திருந்தாளா? என்னவாம்? காசுவேண்டுமாமா?” இவன் குரலும் வறண்டு தான் வெளிப்பட்டது.
 ஒருவர் தன்னை மிகவும் இலகுவாக ஏமாளியாக்குகிறார் என்று புரிந்தும் ‘பாசம்’ என்ற ஒன்றை அடையாளமாகக் கொண்டு ஏமாந்துபோகிறானே! அது எத்தனை நாட்களுக்குத்தான் மனதில் இதம் பரப்பும்! இப்போதெல்லாம் தமக்கை பற்றி சிந்தித்தாலே இவன் மனம் தொட்டாச்சிணுங்கிஆகிவிடுகின்றது.
    “ஹ்ம்...அவளுக்கு போனமாதம் தானே லட்டுக் கணக்கா கொடுத்திருக்கு!” கடினமாகஆரம்பித்தார் தாய்.
   “இங்கபார் ராசா, உன் அப்பா நான் கதைப்பதைக் காதிலேயே வாங்கப் போவதில்லை. இத்தனைவருடங்கள் வாங்காதவர் இனியா வாங்குவார்! அந்தாள் திருந்தாத ஜன்மம். ஆனால் நீ...கொஞ்சம்  புத்தியாக நடந்துகொள் தம்பி. நீங்கள் ஐந்து பேரும் எனக்குப் பிள்ளைகள் தான்; ஆனாலும், உன்னை எல்லோருமாக மொட்டை அடிப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.” தாயின் குரல் தழுதழுத்து விட்டது.
   “அம்மா! என்ன நடந்திச்சி? இப்போ ஏன் சாமத்தில் எடுத்துக் கண்ணைக் கசக்குறீங்க?” சலிப்பு வந்திருந்தது இவனுக்கு!
வேலைக்குப் போய்க் களைத்து வந்தவனை நிற்கவைத்து பழைய புராணம் படித்தால்!
 “உன் அப்பா தூக்கிக்கொடுத்துக் களைக்க மாட்டார்; உன் அக்கா வாங்கிக் களைக்க மாட்டாள். ‘காதலித்து கல்யாணம் செய்தாலும் அவள் என் மூத்தவள்; நான்கு பிள்ளைகள் வேறு. புருசனுக்கு வேலை அப்படியும் இப்படியும். நம்மிடம் இருக்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா? இப்ப என்ன, சீதனம் என்றா அவளுக்குக் கொடுத்தோம்!’என்றுசொல்லிச் சொல்லியே மாதம் மாதம் பணம் கொடுத்து உன் அத்தானை முழுச்சோம்பேறி ஆக்கியது உன் அப்பாதான்.”
இதையெல்லாம்மகன் புரிந்து, பணம் அனுப்புவதைக் குறைக்க மாட்டானா என்கின்ற ஆதங்கம் தாய்க்கு.
   “விடுங்கம்மா!அதைப் பற்றி இப்போ ஏன் என்னிடம் சொல்லுறீங்க?ஒவ்வொருமுறையும்கடமை என்பதையும் கடந்து பாசமாகத்தான்மா காசு அனுப்புறேன். அக்காவை விடுங்க, எனக்கு அவளைப் பற்றிய எந்தக் கதையும் தேவையில்லை. நமக்கு விருப்பமில்லை என்ற பிறகும் வீம்புக்கு கல்யாணம் செய்தாள்; இப்போ வந்து நின்று அப்பா பாசத்தை பயன்படுத்தி...பச்... அவளைப் பற்றி எதுவுமே என்னிடம் சொல்ல வேண்டாம்.” இவன்குரலில் மிதமான கோபம்!
    ‘ஊரறிந்த குடிகாரன்;ஊதாரி.இதெல்லாம்தெரிந்தும் காதல்,கல்யாணம் என்று என்ன பாடுபடுத்தினாள். கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரிந்தால் புண்ணாகும் தான். பிறகு, மருந்து போட நாங்க வேண்டுமாமா?’ இப்படி  மனதில் கொதிப்பவன், தான் அனுப்பும் பணத்தில் அக்காவுக்கு என்று தந்தை கொடுப்பதைத்தடுக்கும்வழிதெரியாது வாய்மூடிவிடுவான்.
   “இப்போ பணம் அனுப்ப முடியாது என்றால் என்ன செய்வீங்க?” இப்படிக் கேட்பதைஅவனால் நினைத்தும் பார்க்க முடிவதில்லை.
இவன்சிறிதாகஆட்சேபக்குரல் எழுப்பினால், வெகுவாகவெகுண்டு விடுவார் அவன் தந்தை.
“என் உழைப்பில் செய்த நகைகளை,காணியை விற்று, அங்க இங்க கடன்பட்டு உன்னைவெளிநாடுஅனுப்பி வைத்தால்என்னிடமேகேள்வி கேட்பாயா?” அங்கிருந்தே இவன் தலையைக்குனிய வைத்துவிடுவார் மனிதன்.
மகன் ரோசக்காரன் என்று தெரிந்தவர், எதைக் கதைத்தால் அவன் வாயை இறுக மூடவைக்கலாம் என்று அறிந்தவர் அதைப் பயன்படுத்திவிடுவார்.
“இப்போ, உன் தம்பி மோட்டார் சைக்கில்வாங்க பணம் கேட்டானாமே!” சிறு அமைதியை விரட்டினார் தாய்.
   “ம்ம்...கேட்டான் தான்மா. அடுத்த மாதம் வாக்கில தாறேன் என்றேன். என்ன செய்கிறான்?டெக்னிகல் காலேஜூக்கு ஒழுங்காகப் போறானா?”
   “எதையோ படிக்கிறான் ராசா. அதைவிட பகட்டுத்தான் அதிகம்.வீட்டில் சமைத்தாலும் கடையில் சாப்பிட்டுவிட்டு,ஃப்ரெண்ட்ஸ்அப்படி இப்படி என்று திரிகிறான்.அதைப் பார்க்க உன் அப்பாவுக்கு துப்பில்லை. ஊர்நியாயம் பேசிக் கொண்டு திரியுது அந்தாள்.இந்த அழகில் மோட்டார் சைக்கில்ஒன்றுதான் இல்லாத குறை; பொறுப்பில்லாதவன்.” கசப்புடன் சொன்னார் தாய்.

   “என்னம்மா சொல்லுறீங்க?” கொஞ்சம் பதறினாலும்,தம்பிக்கு உயர்தரப் பரீட்சையில்(பிளஸ் 2) நல்ல பெறுபேறுகள் வரவில்லை என்றதிலிருந்து தாயின் புலம்பல் இதுதான் என்பதை நன்கறிந்திருந்தவன்,அன்னையை சமாதானம் செய்ய முயன்றான்.
   “படிப்பு எல்லோருக்கும் வராதும்மா. அதைவிட, எல்லோரும் கம்பஸுக்கு போவதென்பதும் சரிவராதில்லையா? ஏதோ அவனுக்கு வருவதை படித்து ஒருவேலையைத் தேடி, தன் காலில் நிற்கட்டும்.இருபத்தியொருவயதுதானே!போகப் போக பொறுப்புத் தானாக வரும்.”
   “போடா தம்பி. நீ வெளிநாடு போக ஆயத்தம் செய்யும் போது உனக்கு எத்தனை வயது? உனக்கு அந்தவயதில் பொறுப்பு வரவில்லையா? இது எல்லாம் அளவுக்கு அதிகமாகக் கிடைப்பதால் வரும் மிதப்பு! இப்படியே போனான் என்றால்அவன் குட்டிச் சுவர்தான்! அவனுக்கு மோட்டாருக்கு காசு அனுப்ப வேண்டாம் தம்பி; அவன் உழைத்து வாங்கட்டும். அப்போதான் அருமை தெரியும்.” ஒருபோதுமின்றி தாயின் படபடப்பில் இவன் மிகவும் குழம்பிவிட்டான்.
  ‘எதுவோ நடந்திருக்கு! இல்லையோ அம்மா இப்படி நேரம் கெட்ட நேரத்தில்எடுத்துக் கலங்க மாட்டார்.’ நினைத்துக்கொண்டே எழுந்தவன், அருகில் தன் நண்பர்கள் இருப்பதால் மெல்ல வெளிவாயிலைத் திறந்து பாதையால் இறங்கி ஓரமாக நடக்கத் தொடங்கினான்.
   “தங்கச்சிகள் எப்படிம்மா இருக்கிறார்கள்? எல்லோரையும்பார்க்க ஆசையாக இருக்கும்மா! நிஷாவுக்கு ஒரு கல்யாணம் சரிவந்தால் அதைச் சாட்டாக வைத்து ஓடி வந்துவிடுவேன்.”
   மகன்குரலில் தொனித்த ஏக்கத்தில் தாய் மனம் உருகி விழிகளைக் கடந்தது!
   “என்பிள்ளைசுமைதாங்கியாகிவிட்டான்!இந்த வீட்டில் உள்ள நன்றி கெட்டதுகளுக்கு அது புரியுதில்லையே!” வாய்விட்டே அரட்டியவர், கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த மகள் நிஷாவை நெருப்பாகச் சுட்டார்.
 அவளோ, கதிரைக்குள் உடலைக் குறுக்கி,குன்றலும்கண்ணீருமாகஅமர்ந்திருந்தாள்.
   ‘அண்ணா என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்!?” இந்த எண்ணமே அவள் மனதைக் கிழித்துக் கொண்டிருக்க, “நான் ஏன் இப்படி நடந்துகொண்டேன்? என்னுள் சாத்தான் புகுந்து கொண்டானோ! இதையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று மாற்றமுடிந்தால்; என்மனம் அதற்கு இசையுமா?’தமையனின் நம்பிக்கையை அழிக்கும் வேலையைச் செய்த தன்னையே தான் சபித்து, கண்ணீரில் கரைந்தாள் நிஷா.
  தாய் சுமைதாங்கி என்றதும், “பச்... என்னம்மா இது? நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லையம்மா.” என்றவன், தாய் தொடர்ந்து சொல்ல, பேச்சை நிறுத்திவிட்டான்.
   “அம்மா!என்னம்மா நடந்தது?”
   “சின்னவள் தர்சி உன் நம்பிக்கையைப் பொய்யாக்க மாட்டாள் தம்பி. அந்த நம்பிக்கைஎனக்கும்மலையளவு இருக்கு.” சொன்னவரின் விசும்பல் சத்தம் இவன் தேகத்தை நடுங்க வைத்தது.
   “அப்போ! நிஷா? நிஷா எங்கேம்மா? அவளுக்கு என்ன?” அவன் செல்லத் தங்கை அல்லவா அவள்! பதறிவிட்டான்.
தாயோ, அமைதி காக்கக் காக்க இவனின் இதயத் துடிப்பு எகிறியது!
கடைசியாக,உறுக்கி உலுக்கி இவன் கேட்க, அவர் சொன்னதோ இவனை அப்படியே உறையச் செய்துவிட்டது.
   வெளிப்புறத்தில்நன்றாகப் பரவியிருந்த குளிரையும் தோற்கச்செய்து கோபத்தில் உடல் தகித்துப் போனான் அருள்.

“இப்போஅவள்எங்கே?
  “விசரிதம்பி, வடிகட்டின விசரி; இதோ இருக்கிறாள் ராசா.”
“அவளிடம்ஃபோனைக் கொடுங்க.” மகன்அந்நியம் ஆகிவிட்டான் என்றுணர்ந்தார் தாய்.
தங்கையோடு கதைத்துவிட்டு வைத்தவன் செவிகளில்,“அண்ணா மன்னித்துக்கொள்ளுங்கண்ணா; மன்னித்துக்கொள்ளுங்க.” செல்லத் தங்கையின் தீனக்குரலே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
    என்றைக்குமேஇவன் தம்பி தங்கைகள் இவனை எதிர்த்து ஒத்த சொல்சொன்னதில்லை.இவன் வெளிநாடு வரமுன்னிருந்தே அவர்கள் அப்படித்தான். “அண்ணா சொன்னார்.” என்றால் மறுபேச்சு பேசமாட்டார்கள்.
   இன்றும், அவன் பேசிய அத்தனை கொதிப்பான வார்த்தைகளுக்கும் கேள்விகளுக்கும் அவள் தந்த பதில்அழுகையோடுமிகவும்அடங்கியே வந்திருந்தது.
   ‘என் தங்கச்சியா இப்படி? என் நிஷாவா?’ உள்ளம் தகிக்க வீடுவந்தவனின் சிந்தை முழுவதும் தங்கை சொன்னவற்றைச் சிந்திக்க,அமைதியின்மையில் உறக்கமின்றி உழன்றவன் காலை எழுந்ததும் மீண்டும்தங்கைக்கு அழைத்தான்.
    மனதில் கொளுந்துவிட்டெரிந்த ஆத்திரத்தைக் கடந்து யோசிக்கையில் சிறுபொறியாகத் தோன்றிய சந்தேகத்தில் தங்கையோடு கதைத்தவன், முடிவில், கொலைவெறி கூத்தாட,அதை அடக்கப் பெரும் பாடுபட்டுவிட்டான்.
 இடையில் நண்பர்களின் கலாட்டாக்கள்; குத்தல் கதைகள்; கேலிகள் செவிகளை செவிடாக்கிட மரத்துப் போனான் அவன். 
அப்போதேவீடு செல்வதாக முடிவெடுத்து,பயணச்சீட்டும் எடுத்துவிட்டே நண்பர்களிடம் சொல்லியிருந்தான்.
அதைக் கேட்டவர்களின் காலாட்டக்களை காதிலும் வாங்கிக் கொள்ளவில்லை அவன்.
அவன் பிரச்சனை அவனுக்கல்லவா தெரியும்?
இதையெல்லாம் சபையில் வைத்து ஆற அமர பேசி உரையாடவா முடியும்?
நண்பர்களே என்றாலும் பகிர்ந்து விவாதம் செய்யக்கூடிய விடயமா இது?
என் தங்கையின் வாழ்வு அங்கே உள்ளதே! என்னதான்தங்கை மீது தீராத கோபம் ஏற்பட்டிருந்தாலும்,அவள்வாழ்வில் சிறுகறையும் வர அவன் இடம் கொடான்.
    “இதுவரை எவ்வளவு கஷ்டப்பட்டேன்?! அவர்கள் வாழ்வில் துன்பப்படுவதைக் காணவா இந்தக் கஷ்டம்?”வாய்விட்டே அரட்டியவன் கண்கள் கலங்கிவிட்டன!
   “முட்டாள் முட்டாள்!” தங்கையைத் திட்டினான்.
செய்திகள், பத்திரிகைகள் மட்டுமின்றிஇப்போதெல்லாம்ஒவ்வொருவரின் பேச்சிலும் அடிக்கடி இடம் பெறும் நவீன அவலங்கள் ஒவ்வொன்றும் அவன் மனதில் வந்து வந்துபோனது.
   பாவம்,ஐந்தறிவுள்ள‘விட்டில் பூச்சிகள்’! வெளிச்சத்தை நாடிச் சென்று சுற்றிச் சுற்றிகுதூகலித்துவிட்டு, அதில் விழுந்தே உயிரை மாய்த்துக் கொள்ளுமே!
  ஆறறிவிருந்தும் இவர்களும் இதைத்தானே செய்யத் துணிகின்றார்கள்!
நெருப்பென்று இனம் காண முடியாதவர்களா இவர்கள்?!
படித்திருந்தென்ன! அறிவிருந்தென்ன! பகுத்தறியும் தன்மையை இழந்தல்லவா நிற்கிறார்கள்!
எவ்வளவுதான் முன்மாதிரியாகஅவலங்கள் நடந்தேறினாலும்மீண்டும் மீண்டும் அதற்குள் சென்று மாட்டிக் கொள்கிறார்களே!
 எல்லாவற்றின் முடிவில், தம் செயல்களுக்குசாதகமான விளக்கங்களையும் அல்லவா முன்வைக்கிறார்கள்.
அவன் மனம் பதறியது!   ஒரே நாளில், பலவயதுகளைக் கடந்து விட்ட மூப்பை அவன் இதயம் உணர்ந்து கொண்டது.   
   பத்து வருடங்களுக்குப் பின்,சொந்தநாட்டையும் வீட்டையும் காணப்போகிறோம் எனும்மகிழ்வு,துளியும் அவனுள் வர மறுத்தது.
உற்றஉறவுகளில் மிகுந்தபற்று வைத்திருந்தவனின்இதயம்உணர்வின்றியிருக்க,இயந்திரமாக நிற்கிறான் அருள்.
  ‘வசதி வாய்ப்புகள் ஒருவர் வாழ்வில் இப்படியும் விளையாடுமா? அட விளையாடுமே! எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான்.ஆனால் என்ன, அமிர்தமாக ருசித்து உண்ணும் வகையில் அந்த நஞ்சு இருந்து தொலைக்கும். அது தன் குணத்தைக் காட்டி,ஒவ்வாதுஎன்று சுதாகரிக்க முதல் ஆளை விளுங்கிவிடும்.’ கசந்த முறுவல் கூட தயக்கத்துடன் எட்டிப் பார்த்துச் சென்றது.
அத்தி பூத்தாற்போல் அமையும் விடுமுறைநாட்களைமிகவும் ஆவலாய் எதிர்பார்ப்பவன் இவன்.
இன்று, அந்த நாள் ஏன் வந்தது என்று நொந்து கொண்டான்.
ஊசிவிழுந்த ஒலி தெளிவாகக்கேட்கும் வகையில்அமைதியாக இருந்த வீட்டில், இப்போது மூச்சு முட்டுவதாக உணர்ந்தான் அருள்.
மனதின் வெம்மை உடலை ஆக்கிரமிக்க, முதல் நாள் பகல் உண்ட பாணுக்குப் பிறகு எதையுமே ஒழுங்காக உண்ணாதிருந்தவன்,கடமைக்காகவேனும் வயிற்றில் எதையாவது தள்ளுவோம் என சமையலறையை நாடினான்.
கசப்போடு எழுந்த ஆத்திரத்தைவிழுங்கிக்கொண்டே சமையலறை அலுமாரியைக் குடைந்து, குளிர்சாதனப் பெட்டியைத் தடவி ஒருமாதிரி ஒரு ஆம்லட்டும் சில வாட்டிய பாண் துண்டுக்களுமாக தன் இரவுணவை முடித்துக் கொண்டான்.
அதே வேகத்தில் நிலக்கீழ் அறையிலிருந்து தனது பயணப் பையை தூசுதட்டி எடுத்து வந்தவன்,பயணத்துக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.
   ‘சரி, இப்போ ஊருக்குப் போகிறேன்; அங்கு போய்?’ அவன் மனதில் புதிதாக ஒரு கேள்வி மெல்ல எட்டிப் பார்த்தது.
   ஏற்கனவே,குற்ற உணர்விலும்பலத்த ஏமாற்ற உணர்விலும் சிக்கித் தவிக்கும் நிஷாவை இன்னும் குன்றவைக்கவா போகிறேன்?!
   சட்டென்றுஎல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு எழுந்தான் அருள்.
   பால்கனியைத் திறந்து வெளியில் சென்றவன், சிலுசிலுத்த பனிக்காற்றில் தேகம் விறைத்தாலும் அதை உணராது சிந்தை கலங்கி நின்றான்.
    எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருப்பானோ தெரியாது, விருட்டென்று உள்ளே நுழைந்தவன் மணியைப் பார்த்தான்; அது இரவு எட்டை  நெருங்க முயன்றுகொண்டிருந்தது.
  ஓர் தீர்மானத்துக்கு வந்தவன் போல்கைபேசியை இயக்கி, காதில் பதித்துக்கொண்டே மீண்டும் பால்கனியை நாடினான்.
   “சொல்லு மச்சான், வீடு வந்து சேர்ந்தாயா? எதையாவது கொட்டிக் கொண்டாயா? இல்லையென்றால் இங்க வாவேன்டா; பத்து மணிக்கு மேலே தான் சாப்பாட்டைப் பற்றி யோசிப்பார்கள்.”அக்கறையாக விசாரித்து, பிறந்த நாள் வீட்டுக்கு வரும் படி அழைத்தான் வேந்தன்.
    “நான் சாப்பிட்டு விட்டேன் வேந்தன்.நீ என்ன செய்கிறாய்?”
    “ஹா..ஹா...இது என்ன கேள்வி! பிறந்த நாள் வீட்டில் வந்து நீச்சலா அடிப்போம் மச்சான்??” கேலியாகத் தொடர்ந்தான் வேந்தன்.
    “குடித்துக் கொண்டிருக்கிறாயா வேந்தன்?” கேட்டவன்குரலில்பட்டும் படாமலும் கண்டிப்பின் சாயல்.
   “மச்சான்,இந்த கிண்டல் தானே வேண்டாம் என்கிறது? எல்லோரும் உன்னைப் போல இருக்க முடியாதடா! நான் என்ன மொடாக் குடியனா?ஏதோஇப்படிப்பிறந்தநாள்விழா,விஷேசம் என்றால் மற்றவர்களோடுசேர்ந்து பம்பலுக்குஒரு ரவுண்ட்;என் லிமிட் தெரியும் அருள்.” என்றவன்,
 “மற்ற மூன்று பேரையும் தூக்கித்தான் காருக்குள்ள ஏற்றவேண்டும். இப்பவே உளறத் தொடங்கிட்டான்கள்; ஆனாலும் விடுவான்களா?” சிரித்தான்.
  “ஓ! உனக்குஉன்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும் என்று எனக்கும் தெரியும் மச்சான்.” என்ற அருள், கொஞ்சம் தடுமாறினான்.ஆனாலும் ஒரு முடிவுடன் தொடர்ந்தான்.
    “இப்போ ஏன்எடுத்தேன் என்றால்...உன்னோடு கொஞ்சம்... கதைக்க வேண்டும் மச்சான். இப்போ...இப்போ வரமுடியுமா? பிறகு அவர்களைப் போய் அழைத்து வரலாம்.” அவன் சொல்கையில் விறுவிறுவென்று வெளியேறிக் கொண்டிருந்தான் வேந்தன்.
   “அருள், இதோ பத்து நிமிடத்தில் வீட்டில் நிற்பேன்.” சொல்லிக் கொண்டே காரில் ஏறியவனை, “மச்சான் சாப்பிட்டுவிட்டு வாடா; ஆசையாகப் போனாயே!” என்றான் அருள்.
   “ப்ச்..பரவாயில்லை விடு. நீ எதைச் சாப்பிட்டாயோ அதையே வந்து சாப்பிடுகிறேன்.” என்றவன்,ஃபோனை நிறுத்தி வைத்துவிட்டு காரைக் கிளப்பினான்.

   பத்து நிமிடத்தில் விரைந்து வந்திருந்த வேந்தன், வீட்டின் அருகிலிருந்த நிறுத்துமிடத்தில் காரை விட்ட வேகத்தில் வீட்டினுள் நுழைந்தான்.
  ‘ஊரில் தான் எதுவோ நடந்திருக்கு! அதுதான் இவன் ஆளே சரியில்லாமல் இருக்கிறான். என்னவென்று என்னிடம் சொல்வானா?’ உள்மனம் முனகியது.
 ஏதேதோ எண்ணங்கள் எட்டிப்பார்த்தன! அவற்றினிடையே இலேசாக எட்டிப் பார்த்தாள் நிஷா.
   ‘மனதில் உள்ள விருப்பத்தைவெளியே சொல்லும் தைரியம்இல்லாமல் இருக்கிறேனே! உன் தங்கச்சிக்கு ஊரெல்லாம் மாப்பிள்ளை பார்க்கிறாயே!ஏன் நான் அவளுக்குப் பொருத்தமானவன் இல்லையா அருள்?’இவனின் நாக்கு நுனியில் துருத்தும் வார்த்தைகள் வெளியே வரமுனையாது பரிதாபமாக பின்வாங்கிவிடுமே!
  ‘சரி, என் தங்கைக்கு அவனைக் கேட்டுப் பார்ப்போம்; அப்போசரி அவன் நினைவில் நான் விழுவேனா பார்ப்போம்!’ என்றிருந்தசிறு நப்பாசையும் அவன் பதிலில் அடங்கிவிட்டது.
   ‘இவன் இந்தளவுக்கு குழம்பும் வகையில் என்ன நடந்திருக்கும்! ஒருவேளை அவள் அக்கா போல நிஷாவும்யாரையாவது காதலித்து தன்னிஷ்டத்துக்கு போய்விட்டாளோ!’ இப்படித்தான் அவன் மனம் சட்டென்றுஎண்ணிக் கொண்டது.
   சிறிதாகமனதில்பரவ முயன்ற ஏமாற்ற உணர்வும் சிறு பதைபதைப்புமாக வீட்டினுள் நுழைந்தவனை ஆம்லட், வாட்டிய பாண் சகிதம் வரவேற்றான் அருள்.
   “ஹா..ஹா..”தன்னைமறந்து நகைத்தான் வேந்தன்.
   “மச்சான் ஆட்டிறைச்சிக்கொத்துடா! அதை விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.” சிரிப்போடு சொன்னவன்,“சாந்தன் அண்ணாவுக்கு ஒரு ஃபோனைப் போட்டு உனக்கும் சேர்த்தே பார்ஸல் அனுப்பச் சொல்வோமா?” என்றவன், அருளின் முறைப்பில் அமைதியாக பாணைக் கடித்தான்.
    “ஏன்டா இப்படி சாப்பாட்டுக்கு அலைகிறாய்? இப்போ என்ன, ஆட்டிறைச்சிக்கொத்து தானே வேண்டும்! பொறு, ஊருக்குப் போயிட்டு வந்த பிறகு ஒருநாளைக்கு செய்து தாறேன்.” என்றநண்பனைஉற்றுப் பார்த்தான் வேந்தன்.
   அவன் முகம் ஏதோ ஒரு தீர்மானத்தோடு தெளிந்திருப்பதைக் கண்டவன், “அதைவிடு மச்சான்; நீ செய்து தரும் போது சாப்பிட்டுக் கொள்கிறேன்.” கேலியாக ஆரம்பித்து, “என்ன விஷயம் மச்சான் ஊரில் ஏதாவது பிரச்சனையா?” தொடர்ந்தான்.
நண்பனின்அருகில் அமைதியாகஅமர்ந்துகொண்ட அருள், சிறிது நேரம் எதையும் பேசவில்லை.
   “மச்சான், நான் இப்போ சொல்லப் போவது நமக்கு இருவருக்குள்ளும் இருக்க வேண்டும். யாரிடமாவது சொல்லவில்லை என்றால் என் மண்டை வெடித்துவிடும் போலிருக்குடா!” என்றவன், கண்கள் கலங்கியதைக் கண்டு திடுக்கிட்டுவிட்டான் வேந்தன்.
   வாயில் அடைத்த பாணை முழுங்கியவாறே தட்டை நிலத்தில்வைத்துவிட்டு,“டேய் அருள் என்னபிரச்சனையடா? உன் வீட்டில் ஏதாவது பிரச்சனையா? உன் அக்கா...அத்தான்...” தொடர்ந்து கேட்கத் தயங்கியவாறே அருளின் கரத்தைப் பற்றியவன்,
“என்னிடம் சொல்வது எதையும் எக்காலத்திலும் வெளியே சொல்ல மாட்டேன் அருள். உனக்குத்தான் நான் மற்றவர்களில் ஒருத்தன்; யாரோ. நான் அப்படி உன்னை நினைக்கவில்லை. எப்போதுமே நீ எனக்கு தனி மச்சான்.” என்றவன் குரலும் முகமும் இறுகிவிட்டது.
   “மனம் விட்டுப் பேசவேண்டுமென்றுஒருநாளும் நீ நினைப்பதில்லையே! நேற்றிலிருந்து எவ்வளவு கேட்டேன். சரி, எல்லோரும் இருக்கும் பொழுது சொல்லப் பிடிக்கவில்லை என்றால் தனியாகப் போய்க்கதைக்க முடியாதா?” காட்டமாகத் தொடங்கியவன், நண்பனின் முகம் மீண்டும் கன்றிவிட்டதைப் பார்த்து,“இப்போ சரி சொல்; என்ன பிரச்சனை?” குரலில் ஆதரவு நிறைந்திருந்தது.
   “நிஷா..நிஷாதான்டா...” ஆரம்பித்த அருள் இவன் மனதை, திக்கென்று திடுக்கிட வைத்தான்.
“நிஷாவுக்கு என்ன அருள்?” குரல் மிகவும் இறங்கியிருந்தது.
 ‘ஆஹ...அவள் யாரையோ காதலித்துவிட்டாள் போல! தமக்கை போல வீட்டை விட்டும் போய்ட்டாளோ!ஆனால், அவள் அப்படிப்பட்டவள் இல்லையே! நிச்சயம் அப்படியெல்லாம் நடந்திருக்க மாட்டாள்.’ இவன் எண்ணம் முடுக்கிக் கொண்டு புறப்பட்டிருந்தது.
அருளோ தலை குனிந்திருந்தான். ‘எப்படிச் சொல்வது?’ அவமானம் பிடுங்கித் தின்றது.
‘இத்தனை நாள் ஒன்றாக இருந்தும் கேட்காதவன் இபோ இப்படிக் கேட்டால் என்னைப் பற்றி என்ன எண்ணுவான்? பச்சைச் சுயநலவாதி என்றா? நினைத்துவிட்டுப் போகட்டுமே! அவனுக்கு விருப்பமா என்றுதானே கேட்கப் போகிறேன்.இதுவெல்லாம் கட்டாயப்படுத்தும் விடயமா!’தங்கை மீது கொண்ட அளவு கடந்த பாசம்,நண்பனைநிமிர்ந்து பார்க்க வைத்தது.
   “நிஷாவுக்கு ஒரு பொருத்தம் சரிவந்திருக்காம் வேந்தன்;மாப்பிள்ளை யாழ்ப்பாணம் தானாம்.”
   “ஓ!” மேலே சொல் என்பதாக பார்த்தாலும் வேந்தன் மிகவும் குழம்பிவிட்டான்.
 ‘அப்போ, காதல் பிரச்சனை இல்லை. நிறையச் சீதனம் கேட்கிறார்களோ! என்னிடம் கேட்கப் போகிறானோ! ச்சா...மாடாக உழைத்துச் சேர்த்து வைத்திருக்கிறான்; காசு பிரச்சனையாக இருக்காது. கண்ணுக்கு முன்னால் இருக்கும் நானெல்லாம் இவன் பார்வைக்கு மாப்பிள்ளையாகத் தெரியமாட்டேனே! கட்டினால் யாழ்ப்பாணப் பிரபுவைத்தான் கட்டிக் கொடுப்பார்களாமே!’ புலம்பலோடு நண்பனை நோக்கினான்.
 “இப்போ வந்து, தான் ஒருத்தனைக் காதலிக்கிறேன் என்று சொல்கிறாளாம்டா!” குரல் கம்மச் சொல்லி வேந்தனை நிமிர்ந்து அமர வைத்தான் அருள்.
   “என்ன மச்சான் சொல்கிறாய்! நிஷாவா?”
   “இதே அதிர்ச்சிதான்டா எனக்கும். அவளில் எவ்வளவு நம்பிக்கைவைத்திருந்தேன். எல்லாத்தையும் சுட்டுப் பொசுக்கிப் போட்டாள். சரிதான் போடி; எக்கேடும் கெட்டுப் போ என்று எப்படிடா உதறுவது?” கண்கள் பளபளக்க அவன் பார்த்த பார்வையில் திடுக்கிட்டுவிட்டான் வேந்தன் .
   “என்ன பிரச்சனை அருள்? முழுதாகச் சொல்லாமல் இப்படிச் சொல்லி என்னைக் குழப்புகிறாய். நிஷா அப்படி ஒன்றும் முட்டாள் இல்லை.ஏன் அவன் நல்லவன் இல்லையா? நம்ம குடும்பத்துக்கு சரிவரமாட்டானா? எந்த ஊர்? என்ன செய்கிறான்?” கேள்விகளை அடுக்கினான்.
   “அந்த மானக்கேட்டை நான் எப்படிடா சட்டுப்புட்டென்று சொல்வது!” என்ற அருள், எழுந்துபோய் தனது சிறு கையடக்ககமராவை எடுத்து வந்தான்.
எப்போதாவது விழாக்களுக்குப் போனால் வீட்டுக்கு அனுப்ப என்று படங்கள் எடுப்பான்.‘இதை ஏன் இப்போ கொண்டுவாறான்?’ யோசனையோடு பார்த்தான் வேந்தன்.
   கமராவை இயக்கித் தட்டிக்கொண்டே போனவன்,“இந்தப் படத்தைப்பார்.” கமராவைக் கொடுக்க வாங்கி விழிகளை அதில் பதித்தவன் முகம்சட்டென்று சுருங்கியது.
    “அட..நம்ம தோசை குடும்பம்.” என்றவன் முகத்தில் அத்தனை குழப்பத்திலும் நகைப்பு மலர்ந்தது.
    “மச்சான், இவனும் ஒரு ஆளென்று இவன்ஃபோட்டோவை வேறு வைத்திருக்கிறாயே! பார் என்ன மாதிரி ஜம்மென்று நிற்கிறான்.ராஸ்கல்!இவன்மனிஷி ஐந்து பேருக்கு பத்துத் தோசைகணக்குப் பார்த்துத் தர, நானும் அழகாகச் சிரித்துக்கொண்டு வாங்கி முழுங்கிவிட்டு, ‘அடநம் முன் வீட்டில் இருக்கிறார்களே,இப்படி அப்பப்ப அளந்துசரிவீட்டுச் சாப்பாடு கிடைக்குமே’ என்று காணும் இடங்களில் பேசிச் சிரிக்க, இந்த நாசமாப்போனவன் தன் பெண்டாட்டியை நான் சைட் அடிக்கிறேன் என்று சண்டைக்கு வரவில்லையா?மறக்குமாடா இவனை எனக்கு!ராஸ்கல்.” சொல்லிக்கொண்டே பல்லைக் கடித்தவன், சட்டென்று நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான்.
   “இவன்ஃபோட்டோவை ஏன் காட்டுகிறாய்? இப்போ இவனுக்கு இரண்டு பிள்ளைகளாம்; இங்கிருந்து லண்டன் போய் இரண்டு வருடங்கள் இருக்கும் இல்லையா? இந்த முறை லண்டன் போன நம்மகடைக்காரஅண்ணா கண்டு கதைத்ததாக அன்றைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.” என்றவன், மீண்டும் நண்பனைக் கேள்வியாகப் பார்த்தான்.
    “இந்த ராஸ்கல் நிஷாவின் பேஸ்புக்ஃப்ரெண்டாம்! பார் கொடுமையை; அதில் கதைத்துக் கதைத்து காதலாம்..” அவன் சொல்லிக் கொண்டிருக்க கையிலிருந்த கமரா கீழே தெறித்துவிழ விருட்டென்று எழுந்தான் வேந்தன்.
   “என்னடா அருள் சொல்கிறாய்?
“கேட்க உனக்கே இப்படி இருக்கே எனக்கு எப்படி இருந்திருக்கும். ‘இப்படி காதலிக்கிறாள் தம்பி; லண்டன் பெடியன்; விசாரித்துப் பார்த்து நல்லவன் என்றால் கட்டி வைப்போம்.’ என்றுதான் அம்மாசொன்னார்.எனக்கு வந்த ஆத்திரத்தில்அவளை நன்றாகத் திட்டிவிட்டேன். ஒழுங்கான வளர்ப்பு வளர்ந்த ஒருத்திக்கு இப்படியெல்லாம் புத்தி போகுமா என்று கேட்டுவிட்டேன்.பிறகுதான்விபரம் கேட்க,பெயரையும் லண்டனின் இருப்பதாகவும் சொன்னாள்.வெளிநாட்டில் அண்ணா இருக்கிறேன்என்றால் சீதனம் கேட்டாலும் என்று நான் இங்கிருப்பதை அவனிடம்சொல்லவில்லையாம். பார், அவ்வளவு புத்திசாலி என் தங்கை!” சொன்னவன் குரலில் வெறுப்பு!
“சுதாகர்இரண்டுவருடத்துக்கு முதல் வரைநெதர்லாந்தில்இருந்துவிட்டு லண்டன் போனவர் என்றாளா! உடனே எனக்கு நினைவு வரவில்லை.இரவு யோசித்துப் பார்க்கும் போது தற்செயலாகத் தான் நம்ம முன் வீட்டில் இருந்தவனும் சுதாகர் தானே என்று நினைவு வந்தது. ஆனாலும், கல்யாணம் செய்தவன்; பிள்ளை குட்டிக்காரன்; நம்பிக்கை இல்லாமல் தான்காலைல அவன் போட்டோ இருந்தால் தா என்றேன். அனுப்பி விட்டாள் மச்சான்.” சொல்லி நிறுத்தியவன், அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் தான் அடைந்த அதிர்வை இப்போதும் உணர்ந்தான்.
   “உன்னதைக் கொடுத்தாயா என்றதுக்கு, ‘இல்லையண்ணா நான் பேஸ்புக்கிலும் ஃபோட்டோ போடுவதில்லை.அவர் கேட்டவர் தான்; பிறகு தருகிறேன் என்று சொன்னேன். இப்போமூன்று மாதங்களாகத் தான் சட் பண்ணுகிறோம்.’ என்றாள்.போட்டோ கொடுக்கவில்லைஎன்றது கூட உண்மையா பொய்யா? அவளிலிருந்த மொத்த  நம்பிக்கையும் போச்சு வேந்தன்.” அங்கலாய்த்தவன்,
“இந்த ராஸ்கலின் குடும்பப்படத்தை அவளுக்கு அனுப்பி,‘ஏற்கனவே கல்யாணம் செய்தவன் அவன்; இதுதான்டி இன்டர்நெட் காதலின் அழகு!’ என்றதும் ஓவென்று அழுகிறாள்.”கனத்த தலையை கரங்களில்தாங்கிக் கொண்டு குனிந்தான் அருள்.

தொப்பென்றுஅவனருகில் அமர்ந்து கொண்ட வேந்தனால் நடந்ததை கொஞ்சமும் ஜீரணிக்கவே முடியவில்லை.
இப்படியான செய்திகள் அப்படியும் இப்படியும் பரவலாகப் பேசப்பட்டாலும் நம் ஊர், நமக்குத்தெரிந்த பிள்ளைகளும் இதற்கு விதிவிலக்கல்ல எனும் போது அது பெருத்த அதிர்ச்சி தானே!?
   சிலவருடங்களுக்கு முன் எப்படி இருந்த ஊர்? நல்லவைகளையும்துறக்க வேண்டுமா? அதுதான் நாகரீக வளர்ச்சியா?
அங்குநீண்ட மௌனம் நிலவியது.
   “விடக் கூடாது மச்சான்;அந்தராஸ்கலை லேசில் விடக் கூடாது.” கொதித்தான் வேந்தன்.
    “அவனோடு சண்டைபோடுவதால் என்ன பயன் வேந்தன்? நம்ம மானம் தான் போகும். ஆணும் பெண்ணும் தப்புச் செய்தாலும் அதிகம் தாக்குப்படுவது பெண்கள் தானே!அதை அவர்களும் உணர்ந்து கொள்கிறார்கள் இல்லையே!”
  “இந்தளவோடுதப்பினாள் என்று ஆறுதல் படுவதை விட வேறென்ன செய்யமுடியும் சொல்லு.” என்றவன்,நண்பனை தீர்க்கமாகப் பார்த்தான்.
  “பேசின கல்யாணத்தையே செய்து வைத்துவிடுவோம் என்கிறார் அம்மா.நடந்ததைச்சொல்லியா கட்டிக் கொடுக்க முடியும்? பிறகொருகாலத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் என்று பயமாக இருக்குடா.” பாசமானசகோதரன்அரட்டினான்.
    “ஏதோமனம் தடுமாறி விட்டாள் மச்சான். என் தங்கை என்றதற்காகச் சொல்லவில்லை;மற்றும்படிஅவள் மிகவும் நல்லபிள்ளை.” என்றவனையே கேள்வியாகப் பார்த்தான் வேந்தன்
   “நிஷா எப்படிப்பட்டவள் என்று எனக்கும் தெரியும் அருள்.நான் இங்கு வருவதற்கு முதல் என்ஃப்ரெண்ட் ஒருத்தன் அவளுக்குப் பின்னால் சுத்தினான்.நல்ல பெடியன்;பார்க்கவும் ஜம்மென்று இருப்பான்.உண்மையாக அவளைக் காதலிக்கிறேன் என்றான்.அதை அவளிடம்சொல்ல,உன் தங்கச்சி என்ன செய்தாள் தெரியுமா? காலில் கிடந்ததைக் காட்டிவிட்டாள். இனியொருதரம் பினாத்திக் கொண்டு பின்னால் வந்தால் நடப்பதே வேறு என்றாளா, அவனுக்கோ சரியான கோபம். நான் தான் அதையும் இதையும் சொல்லி சமாதானம் செய்தேன்.” என்றவனை,
“இதெல்லாம் எனக்குத் தெரியாதேடா! கண்ணுக்கு முன்னால்காதலிக்கிறேன் என்றவனுக்கு செருப்பைக் காட்டியவள், எங்கோ இருப்பவனுடன்அறியாதவனோடுஎன்ன துணிவில் நம்பிக் கதைத்திருப்பாள்!” கோபத்தில்புலம்பியவனுக்கு,அதன் மர்மம் தான் புரியவில்லை.
   “மச்சான், நான் ஏன் இதை உன்னிடம் சொன்னேன் தெரியுமா? என் மனதின் பாரத்தைப் பகிர்ந்து கொள்ள இல்லையடா; என் தங்கை வாழ்வு நல்லா இருக்க வேண்டும் என்ற நப்பாசையில் தான் சொன்னேன்.”தொடர்ந்தவனை,புரியாது பார்த்தான் வேந்தன்.
   “உனக்குப் பிடிக்கவில்லையோ முகத்துக்கு நேரே சொல்லிவிடு; இந்தப் பேச்சையும் மறந்துவிடு.” என்ற அருள்,
    “நீ..நீ நிஷாவை கல்யாணம் செய்து கொள்கிறாயா? அவளைப் பற்றி நன்றாகத்தெரிந்தவன்என்றால் அவள் வாழ்வில் பிரச்சனை வராது என்று நினைத்துத்தான் உன்னிடம் மறைக்காது சொன்னேன்.” இறுதியில் கேட்டே விட்டான்.
வேந்தனின் முகமோ, கோபத்தில் சிவந்துவிட்டது.
   “ஆமாம்ஆமாம்!உன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொழுது நான் உன் கண்களுக்குத்தெரியவில்லையே!
என்தங்கச்சியை உனக்குச் செய்யக் கேட்கும் போதும் உன் தங்கையை எனக்குச் செய்து தரும் எண்ணம் வரவில்லையே!
இப்போ, பிரச்சனை என்று வந்த பிறகுதான் உன் கண்ணில் பட்டிருக்கிறேன் இல்லையா?”கோபமாகக் கேட்டவன்விருட்டென்று அப்பால் நகர்ந்தான்.
நண்பனின்அறிமுகமில்லாத கோபத்தையும் சீறலையும் கண்ட அருள், உண்மை சுட, விக்கித்துப் போய்அமர்ந்திருந்தான்.
   வாயிலைத் திறந்து நண்பன் வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த அருள், அவன் நண்பர்களை அழைத்து வர செல்வதை உணர்ந்து கொண்டவன், அவனின் அமைதி கன்னத்தில்அறைந்ததில் அவமானத்தோடு எழுந்து தனக்குரிய இடத்தில் சுருண்டுவிட்டான்.
   அடுத்த நாள் காலை வழமைபோல எழுந்து வேலைக்குப் புறப்பட்டான் அருள்.
தேநீர் அருந்திக் கொண்டிருந்த வேந்தன் இவனைத் திரும்பியும் பார்க்கவில்லை.
   “அப்போ மச்சான் நாளை இரவுக்கு நீ பயணம் தானே?” கேட்ட நண்பன் ஒருவனுக்கு ஆமென்று தலையாட்டிக்கொண்டு வெளியேறியவனைத்தொடர்ந்து வந்தான் வேந்தன்.
   அருள் திரும்பியும் பாராது தன்காரை நோக்கிச் செல்ல, எட்டி அவன் தோளில் கைபோட்டு நிறுத்தியவன், முறைப்புடன் அவனை உற்றுப் பார்த்தான்.
   “இங்க பாரடா, மனதில் கோபம் இல்லையென்று சொல்லமாட்டேன்; போனால் போகுதென்று விடுகிறேன்.நிஷாவைக் கட்டிக் கொள்கிறாயா என்று என்னிடம் முதலே கேட்டு,அதற்குப் பிறகு இந்த விடயம் தெரியவந்திருந்தாலும் இந்தளவுக்கு கோபப்பட்டிருக்க மாட்டேன்.”நிஜமான கோபம் அவன் குரலில் தெறித்தது.
“பரவாயில்லைவிடு வேந்தன். நான்...நான் அப்படி உன்னிடம் கேட்டிருக்கக் கூடாது.” முகம் கன்றச் சொல்லிவிட்டுநகர முயன்றவன் கரத்தைக் கெட்டியாகப் பற்றி, முறைத்தான் வேந்தன்.
“இங்க பார்,கொஞ்சம் மரியாதை கொடுத்து நடக்கப் பழகு. இவ்வளவு நாளும் எப்படியோ அதை விடு; இனி, தங்கச்சி புருஷன் என்றால் மரியாதையை நான் எதிர்பார்ப்பேன்!” என்றவன், என்ன சொல்கிறான் எனப் புரியாது விழித்தான் அருள்.
“ஏன்டா இப்படிமுழுசுகிறாய்? அப்போ, சும்மா விளையாட்டுக்கா உன் தங்கச்சியைக் கட்டித் தருகிறேன் என்றாய்!நானும் உண்மை என்று நினைத்து விட்டேன்.”என்ற நண்பனை இறுகக் கட்டிக்கொண்டான் அருள்.
“இப்படிக் கட்டிப் பிடித்தால் மட்டும் எனக்குப் போதாது. என் தங்கச்சியை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். சம்மதமா?” கேட்டவனுக்கு, கண்கலங்க “சம்மதம் மச்சான்.” என்றான் அருள்.
    “ஆங் அது! உன் அப்பா...அந்தாளோடு கதைத்து ஒழுங்கு செய்யவேண்டியது மொத்தமும் உன் பொறுப்பு. வில்லங்கம் பிடித்த மனிதன்; நம்மால் முடியாதுடா; என் அப்பா...அதுதான் உன் மாமா...ஒரு அப்பிராணி.” என்ற நண்பனை இறுக அணைத்துக்கொண்டான் அருள்.
 “உன்ப்ளைட் டிக்கட்டை தந்துவிட்டுப் போ; நானும் உன்னோடு ஊருக்கு வாறேன்.”என்றவேந்தன், கண்கள் கலங்க நின்ற அருளை பார்த்துக்கொண்டே, “இன்னொரு முக்கிய வேலை இருக்கே!” என்றவாறு கைபேசியை இயக்கினான்.
    “யாருக்குடா?”
    “கொஞ்சம் பொறு; தெரியும்.”
மறுபுறம் தொலைபேசி எடுபட்டதும்,“ஹலோ நான் வேந்தன் பேசுகிறேன்.” ஆரம்பித்தான்.
     “எந்த வேந்தனா? அட போங்க; நெதர்லாந்து வேந்தன்.உங்கமுன்வீட்டிலிருந்த ஐந்து பேரில் ஒருத்தன்;உங்க வீட்டுக்காரப் பிரபுவுக்கு என்னைக் கண்டால் மிகவும் பிடிக்குமே! அட...தோசை வடை என்று கிள்ளித் தருவீங்களே மறந்து விட்டீர்களா?”
    “டேய்டேய் மச்சான் வேண்டாம்டா ..பாவம் டா” அருள் இவன் தோள்பற்றித் தடுக்க முயன்றான்.
   தடுத்த அருளை முறைத்தவாறே நகர்ந்து நின்றுகொண்ட வேந்தன், தொடர்ந்து அவளோடு கதைத்துவிட்டு வைத்த போது,இதுவரைமனதில் எரிந்த  கோபம் சிறிதே சிறிதாகத் தணிந்த மாதிரி உணர்ந்தான்.
   “ஒத்த வார்த்தை பேசாது கேட்டாடா; அதிர்ந்து போயிருப்பா என்று நினைக்கிறேன்.” என்றவன்,“புத்தியுள்ளது என்றால் புருஷன் என்ற அந்தக் கழுதையை கைக்குள் வைத்திருக்கட்டும்; இல்லையோ, போடா போ என்று துரத்திவிட்டுவிட்டு தான் நிமிர்ந்து நிற்கட்டும்.” முணுமுணுத்தவாறே, “வா..வந்து டிக்கெட்டை எடுத்துத் தந்துவிட்டுப் போ.” வீட்டை நோக்கி நடந்தான். அவனைப் பின்தொடர்ந்தான் அருள்.
    இலண்டனில், வேந்தனோடு கதைத்துவிட்டு ஃபோனையே வெறித்தவாறு திரும்பினாள் சுதாகரின் மனைவி.

   “ஏங்க, உங்களுக்கே இது நியாயமாகப்படுதா? இரண்டுபேரும்வேலைக்குப் போகிறோம்; பிள்ளைகளின் மொத்த வேலைகளையும் பார்த்து, வீட்டுவேலைகளையும் பார்த்து நான் லோ..லோ என்று திரிய, நீங்க வேலைக்குப் போய்வந்தால் சாமம் சாமமாக இந்த ஃபோனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு திரியிறீங்களே!  உங்களுக்குகொஞ்சம் சரி மனச்சாட்சி இருக்கா?”நாளாந்தம்கணவனோடு அவள் பேசும் அதிகபட்ச வார்த்தைகள் இவைதான்.
    ‘அடப்பாவி மனுஷா! இதைத்தான் ஃபோனில் செய்தாயா?மிகவும் தெரிந்தவர்கள் மூலம் தெரியவந்தது என்று அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே அந்த வேந்தன்! நீ நல்லா இருப்பாயா?’உள்ளத்தில் மொட்டுவிட்ட சந்தேகத்தோடு ஆக்ரோஷமும் இணைய, சற்றுத்தள்ளி சோஃபாவில் புதைந்திருந்தவாறேஃபோனில் மிக மும்முரமாக ஆழ்ந்திருந்த சுதாகரை சுட்டுவிடும் பார்வையோடு நெருங்கியவள், சட்டென்று நின்றாள்.
‘ச்சா! ச்சா! இவர் அப்படிப்பட்டவரா?கல்யாணம் செய்த இந்த ஏழு வருடங்களில்என் மீது எவன் ஒருத்தன் பார்வைஇலேசாகப்பட்டாலே கொதித்துப் போவார்.அந்தளவு என்னில் அன்புள்ளவர். இவரைப் போய் யாரோ ஒருத்தன் எதையோ சொன்னான் என்று சந்தேகப்பட்டுவிட்டேனே!
அவன் வேந்தனுக்கு என்ன கொழுப்பும் தைரியமும்! என்னோடு வலிய வலிய பல்லைக்காட்டினான் என்று இவரிடம் நன்றாக வாங்கியவன் தானே அவன்.அதை மனதில் வைத்திருந்து இவ்வளவு நாட்களுக்குப் பிறகு என் குடும்பத்தில் பிரச்சனை பண்ணப் பார்க்கிறானே! நல்லா இருப்பானா? நாசமாகப் போவான்; படுபாவி!’
   சந்தேகமும் ஆக்ரோஷமும் அப்படியே வேந்தன் மீதும் அவன் சொன்ன தகவல் மீதும் திரும்ப, “விடியவெள்ளன வந்துவிட்டான்; என் வாழ்க்கையைக் காப்பாத்துறானாம். படுபாவி!” முணுமுணுத்தவாறு சமையலறைக்குள் நுழைந்தாள் அவள்; பரிதாபரகமானஎத்தனையோ விட்டில்பூச்சிகளில் ஒருஅங்கமாக

Insects in Roots - Rossi Kajan - Short Story - Short novel

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.