சற்றுமுன்

தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்: வாசன்

தமிழகத்தில் நிலவும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடி தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் இன்று காலை டெல்லியில் பிரதமரை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழக முதல்வர் பிரதமரிடம் வைத்த கோரிக்கைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் நிலுவையி...ல் உள்ள மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு வறட்சிக்கான பயிர்க்காப்பீடு கொடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசியிருக்கிறார். 

ஆனால் வறட்சியின் விளிம்பில் காத்துக்கிடக்கின்ற விவசாயிகளுக்கும், ஏற்கெனவே நீட் தேர்வு முறையால் ஏமாற்றம் அடைந்து, தற்போது மீண்டும் நீட் தேர்வு முறை வேண்டாம் என எதிர்பார்க்கின்ற மாணாக்கர்களுக்கும், தொடர் பிரச்சினையாக நீடித்துக்கொண்டிருக்கின்ற மீனவர் வாழ்வாதாரத்திற்கும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதற்கும், அதற்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததற்கும் உரிய பதில் இல்லை. 


இவ்வாறு பலவேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கின்ற தமிழகத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ளாத காரணத்தால் பல மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகம் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இரு மாதங்களில் தமிழக முதல்வர் பாரதப் பிரதமரை இரு முறை சந்தித்திருக்கிறார். ஏற்கெனவே முதல் முறை தமிழக முதல்வர் பாரதப் பிரதமரைச் சந்தித்த போது வைத்த கோரிக்கைகளே இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணம் தமிழக அரசின் பலவீனமா அல்லது மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதா அல்லது மத்திய அரசின் அரசியல் பிடிவாதமா என்பது தெரியவில்லை. 


இரண்டாவது முறையாக இப்போதும் தமிழக முதல்வர் பாரதப் பிரதமரை சந்தித்திருக்கிறார். இப்போதைய சந்திப்பின் போது தமிழக முதல்வர் பாரதப் பிரதமரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்திருப்பதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை என்றும் கூறியிருக்கிறார். 


எனவே மத்திய அரசு தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய திட்டங்கள், நிதிகள் ஆகியவற்றை கொடுப்பதற்கான அறிவிப்பையும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பையும், மேலும் தமிழகத்தில் நிலவும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என்ற அறிவிப்பையும் உடனடியாக வெளியிட்டு காலம் தாழ்த்தாமல் அவற்றை செயல்படுத்த முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.