சற்றுமுன்

சூழ்நிலைக் கைதிகள் - சுதா ரவி - சிறு கதை

வேலைக்கு போய்விட்டு வந்த கதிரேசு வீட்டினுள் நுழையும் போதே மனைவியின் முகம் சரியில்லாததை கண்டு கொண்டான். என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே குளித்து விட்டு வந்தான்.

“ என்ன ஆனந்தி இன்னைக்கு முகம் ரொம்ப டல்லா இருக்கு. ஏதாவது பிரச்சனையா?”

அவன் கேட்டதற்கு மறுப்பாக தலையை ஆட்டி சற்று சலிப்புடன் “ஒன்னுமில்லங்க” என்றாள்.

“சரிம்மா சாப்பாடு எடுத்து வை . ரொம்ப அலுப்பா இருக்கு, இன்னைக்கு நிறைய சவாரி.”

இரவு உணவு அருந்தியதும் சற்று காற்றாட வெளியில் போய் அமர்ந்தான். ஆனந்தியும் வேலைகளை முடித்துக் கொண்டு அவனருகில் வந்தமர்ந்தாள். திரும்பி அவள் முகத்தை பார்த்தவனுக்கு தெளிவில்லாத முகம் மனசை உறுத்தியது.

“ என்ன விஷயம்?எப்பவும் இப்படி இருக்க மாட்டியே என்ன ஆச்சு?”

நிமிர்ந்து அவனை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.” அம்மாவை பார்த்தேன்”என்றாள்.

அவள் சொன்ன செய்தியின் அதிர்வில்” என்ன அத்தையை பார்த்தியா? அவங்க கிட்ட பேசுனியா? வீட்டுக்கு கூப்பிட்டியா?என்று பல கேள்விகளை வரிசையாக அடுக்கினான்.

“அவங்க வந்து பேசுனாங்க. ஆனா நான் தான் உங்க கிட்ட பேச முடியாதுன்னு சொல்லி சத்தம் போட்டுட்டு வந்துட்டேன்.”

“ஏன்மா அப்படி பண்ணின ?”

“நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியாதா? என்னோட வேதனை உங்களுக்கு புரியலையா?”

“இருந்தாலும் ஆறு வருஷம் கழிச்சு பெண்ணை பார்க்கிறவங்களை போய் நீ இப்படி பண்ணிட்டு வரலாமா?”

நான் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் அவங்க தானே காரணம். எப்படி மனசு வந்தது அவங்களுக்கு . பையனுங்க தானே அவங்களுக்கு முக்கியமா போய்ட்டாங்க. எவ்வளவு கெஞ்சினேன் என்னை வேலைக்கு அனுப்ப வேண்டாம்ன்னு.”

“இல்ல ஆனந்தி நீ என்ன சொன்னாலும் என் மனசுக்கு நீ பண்ணினது சரியில்லேன்னு தோணுது.”

“உங்களுக்கு தெரியாதுங்க எங்க குடும்பம் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் என்று. பெருசா வசதி இல்லேனாலும் நாங்க நிம்மதியா தான் இருந்தோம்” என்று சொல்லத் தொடங்கியவளின் நினைவுகள் பின்னோக்கி பயணப்பட தொடங்கியது.

திருப்பூரில் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த அமுதனுக்கும், கனகதிற்கும் மூன்று மக்கள். மூத்தது பெண்ணும் அடுத்து இரு ஆண் பிள்ளைகளும்.  அழகானதொரு சிறிய வீட்டில் அத்தியாவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு கிடைத்தவை போதும் என்கிற எண்ணத்தில் நிம்மதியாக இருந்தனர்.

அமுதனுக்கு பெண் ஆனந்தியின் மீது அலாதியான பாசம். தன்னால் முடிந்த அளவிற்கு பார்த்து பார்த்து செய்வார். அவர்களின் குடும்பத்தை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூட பொறாமை படுவார்கள். மூன்று குழந்தைகள் இருந்தால் கூட எதற்கும் அடுத்தவரிடம் கை ஏந்தாமல் மற்றவர் மதிக்கும் படி வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அன்று எல்லா நாட்களும் போலவே தொடங்கியது ஆனால் அவர்களை பொறுத்தவரை குடும்பத்தின்  நிம்மதி முழுவதையும் தொலைக்கப் பிறந்தது என்று யாருமே அறிய முடியாமல் போனது. மாலை நேரம் பள்ளியில் இருந்து பிள்ளைகள் ஒவ்வொருவராக வர அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து விட்டு வாசலில் வந்து அமர்ந்தார் இன்னும் சற்று நேரத்தில் கணவர் வந்து விடுவார். அவர் வந்ததும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதும் , அவர்களுடன் விளையாடுவதும் என்று குடும்பத்துடன் இருக்கும் நேரங்களை இனிமையாக்க செய்து விடுவார் என்று கணவனை பற்றி எண்ணிக் கொண்டு இதழ்கடையோரம் சின்ன சிரிப்புடன் மகளுக்கு பூ தொடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் பக்கத்து வீட்டு பையன் வேகமாக ஓடி வந்தான் “அத்தை..அத்தை பஜார்ல மாமா வரும் போது கார் ஏறிடுச்சாம். ஆஸ்பத்தரிக்கு தூக்கிட்டு போய் இருக்காங்களாம்” என்றான் மூச்சிரைப்புடன்.

அதை கேட்டதுமே “ஐயோ என் ராசாவே என்ன விட்டுட்டு போய்டாதீங்க” என்று கீழே விழுந்து கதற ஆரம்பித்தார் கனகம்.

உள்ளே படித்துக் கொண்டிருந்த ஆனந்தியும் அவன் தம்பியும் ஓடிவந்து அம்மாவுடன் சேர்ந்து கொண்டு அழ ஆரம்பித்தனர். அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைத்தும்  வேகம் வேகமாக நடந்தது. அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தார்கள்.

கார் கால்களில் ஏறியதால் கால்கள் மொத்தமாக சேதமடைந்திருந்தது. உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும்  இடுப்புக்கு கீழே முழங்கால் வரை மட்டுமே நன்றாக இருந்தது. குடித்துவிட்டு அந்த டிரைவர் தாறுமாறாக ஓட்டியதால் நடந்த விபத்து. உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிந்ததும் அடுத்து இனி எப்படி வாழ்க்கையை ஓட்டப் போகிறோம் என்கிற  பயம் எழுந்தது கனகத்திற்கு.

ஒருமாதம் வரை அமுதனின் நண்பர்கள் உதவியுடனும் தொழிற்சாலையில் இருந்து கிடைத்த உதவியுடனும் எந்த வித பிரச்சனையுமின்றி ஓடியது. ஒரு மாதத்திற்கு பிறகு அமுதனை வீட்டிற்க்கு அழைத்த வந்த பிறகு இனி எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுந்த போது கனகம் மலைத்து நின்றார்.

அமுதனோ திடீரென்று நடந்து விட்ட சம்பவத்தின் தாக்கத்திலும் , தன்னுடைய தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள அடுத்தவரின் உதவியை நாட வேண்டி இருக்கிறதே என்கிற மன வேதனையிலும் உழன்று  கொண்டிருந்தார்.

கனகம் மெல்ல அக்கம்பக்கத்து வீடுகளில் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று எண்ணினார். ஆனால் அந்த வருமானம் கணவனையும் மூன்று குழந்தைகளையும் பார்ப்பதற்கு போதுமானதாக இருக்காதே என்று எண்ணி வேதனைப்பட்டார். இருந்தாலும் குடும்ப வண்டி ஓட கொஞ்சமாவது கிடைக்குமே  என்று எண்ணி வேலைக்கு செல்லத் துவங்கினார். வேலைக்கு செல்வதே கடினமாக இருந்தது அதோடு கணவரை பார்ப்பதே பெரிய கடமையாகி போனது.

பிள்ளைகளை பள்ளியை விட்டு நிறுத்தும் நிலை வந்தது. ஆனந்தி மட்டும் தான் கஷ்டங்களை புரிந்து கொள்ளும் வயதில் இருந்தாள். ஆனால் அவளுமே நிலையை புரிந்து கொள்ளாமல் எல்லாவற்றிற்கும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தாள். அமுதனும் தன்னால் முடியாமல் போனதற்கு எல்லோரிடமும் எரிந்து விழுந்து கொண்டே இருந்தார். குடும்பத்தின் நிலை நாள் ஆக ஆக மோசமாக போய்க் கொண்டிருந்தது.அந்த நேரம் கடவுள் போல அவர் வேலை செய்து வந்த வீட்டின் எஜமானி தன்னுடைய உறவினர் ஒருவருக்கு குழந்தையை பார்த்த்துக் கொள்ள வேலைக்கு ஆள் வேண்டும் என்று கூறியதாக கூறினார். அதிலும் வீட்டோடு இருந்து பார்க்க வேண்டும் என்று கூறி உன் பெண்ணை அனுப்ப முடியுமா என்று கேட்டார்.

அதை கேட்டு கனகம் முதலில் தயங்கினார் வயதுக்கு வந்த பெண்ணை எப்படி இன்னொரு வீட்டில் தங்கி வேலை செய்யும் படி அனுப்புவது என்று. அதனால் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். அன்று பார்த்து அமுதன் ஒரு பக்கம் எதற்கெடுத்தாலும் சண்டை போட பிள்ளைகளும் இரெண்டும் தங்களுக்கு சாப்பிட நல்லதாக ஏதாவது வேண்டும் என்று அடம்பிடிக்க கனகமோ தவித்து போனார்.

குறைந்த வருமானத்தில் வாழ்ந்தாலும் பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து செய்து கொடுத்து பழகியவர் ஆயிற்றே. ஒரு பக்கம் கணவனின் நிலை மற்றொரு பக்கம் குழந்தைகளின் நிலை என்று அவரை குடும்ப சூழ்நிலை வாட்டி எடுத்தது. ஆனாலும் பெண்ணை அனுப்ப அவர் மனம் அனுமதிக்கவில்லை. ஒரு வாரம் கடந்த நிலையில் சின்னவனுக்கு பால் வாங்க கூட காசில்லாமல் போன போது மனம் வெறுத்து போனார். அப்பொழுது தான் அவருக்கு அந்த சிந்தனை வந்தது. நல்ல இடம் என்று தான் சொல்கிறார்கள். கொஞ்ச நாள் வேலை செய்ய விட்டு விட்டு கூட்டி கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

அதனால் கணவனிடம் கேட்டார். அமுதனுக்கும் மனமில்லை . ஆனால் எந்த நேரமும் பசியில் அழுது கொண்டிருக்கும் மகன்களின் முகத்தை பார்த்து அவரும் ஒத்துக் கொண்டார். அதன் பேரில் அடுத்த நாள் சென்று தன் முதலாளி அம்மாவிடம் ஒப்புதல் கொடுத்தார். அதன் பின்னரே ஆனந்திக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. அவளோ போக முடியாது என்று அழுத கரைந்தாள்.ஆனால் கனகமோ அவள் பேச்சிற்கு செவி சாய்க்கவில்லை. ஊருக்கு போகும் நாள் வந்தது. கிளம்பும் நேரம் ஆனந்தி கனகத்தை பார்த்து “ உங்களுக்கு உங்க மகன்கள் மட்டும் தான் முக்கியமா போய்ட்டாங்க இல்ல. ஆனா இனி நான் இந்த வீட்டுக்கு திரும்பியே வர மாட்டேன்” என்று அழுது கொண்டே சொல்லிவிட்டு சென்றாள்.

அதன் பின் அவள் வேலைக்கு சென்ற இடத்திற்கு போய் பார்க்க முடியாமல் மாதம் ஒரு முறை போன் பண்ணி பேசுவார் கனகம் அப்பொழுது ஆனந்தியிடம் கொடுக்காமல் அந்த வீட்டு பெண்ணே பேசி வைத்து விடுவாள். நாட்கள் வேகமாக ஓடியது . வேலை செய்த வீட்டில் அந்த பெண் தன் கணவனுடன் ஆனந்தியை இணைத்து பேசி சந்தேகப்பட்டு அடிப்பதும் உதைப்பதுமாக சென்றது. வெளியில் சொல்லவும் முடியாமல் அங்கிருந்து போகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அந்த பெண்ணின் கணவர் நல்ல மாதிரியானவரே. அவர் ஆனந்திக்கு உதவ வேண்டும் என்று நினைத்தாலும் உதவ முடியாத நிலையில் இருந்தார்.

சில சமயங்களில் வீட்டின் தேவைக்காக கடைக்கு சென்று சாமான்கள் வாங்கி வருவாள் ஆனந்தி. அப்பொழுதெல்லாம் அவளை பின் தொடரும் ஒரு பையன் அவளிடம் அன்பாக பேச, இவளும் தன் கதை எல்லாம் அவனிடம் சொல்ல தொடங்கினாள். இப்படியே அவர்களின் பழக்கம் தொடர்ந்தது. ஒரு நாள் அவன் நீ வீட்டை விட்டு வந்து விடு நான் அழைத்து போய் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்ல அதை நம்பி ஆனந்தியும் அங்கிருந்து கிளம்பி விடுகிறாள்.

அவளை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றவன் சாப்பாடை வாங்கி கொடுத்து சாப்பிட சொல்லி விட்டு வெளியில் சென்று தன் சகாக்களுக்கு போன் மூலம் அழைப்பு விடுத்தான். அந்த சமயம் அங்கு சவாரிக்காக வந்த கதிரேசு அவன் பேசுவதை கேட்டு ஆனந்தியின் நிலையை உணர்ந்தான். உடனே அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களை அழைத்து நிலைமையை சொல்லி அந்த பையனை அங்கிருந்து அடித்து விரட்டினர்.

இது எதுவுமே தெரியாத ஆனந்தி அவன் வருவான் என்று அமர்ந்திருக்க , அங்கு வந்த கதிரேசு நடந்தவைகளை சொல்லி அவளை எங்கே அழைத்து செல்ல வேண்டும் என்று கேட்டான். அதற்கு எனக்கு யாரும் இல்லை ஆனதை என்று சொல்லி எங்கேயாவது ஆசிரமத்தில் கொண்டு விடக் கூறினாள்.

அவன் சிறிது நேரம் யோசித்து “ என் வீட்டுக்கு வா. அங்கே என் அம்மா இருக்காங்க. நாளைக்கு உன்னை எங்கே அழைச்சிட்டு போகலாம்ன்னு யோசிக்கிறேன்” என்றான்.

அதற்கு சரியென்று ஒத்துக் கொண்டாள். அதை கேட்டதும் “ நீ என்ன எதையுமே யோசிக்க மாட்டியா? யார் கூப்பிட்டாலும் இப்படி தான் கிளம்பிடுவியா. முதல்ல அவன் கூப்பிட்டப்ப வந்து வம்புல மாட்டி கிட்ட. இப்போ நான் கூப்பிட்டாலும் சரின்ற” என்று கோபத்துடன் கேட்டான்.

அவன் திட்டியதில் கண்கள் கலங்க “ நான் என்ன செய்வேன். என்னை பத்திரமா பாத்துக்க வேண்டியவங்களே விட்டுட்டாங்க” என்றாள்.

அவளின் குழந்தைத்தனமான பதிலில் வந்த கோபம் வடிந்து போக “ சரி சரி வா என்று கூறி தன் வீட்டிற்கே அழைத்து சென்றான்.

வேகமாக போன காரின் சத்தத்தில் பழைய நினைவுகளில் இருந்து கலைந்தவள் “ அன்னைக்கு மட்டும் என்னை நீங்க காப்பாத்தாம போய் இருந்தா என்ன ஆகி இருக்கும் என் நிலைமை” என்று கேட்டு அவன் தோள் சாய்ந்தாள்.

“அது தான் இல்லையே அப்புறம் ஏன் அதை நினைக்கணும் ஆனந்தி. ஆனாலும் நீ இப்படி பேசி இருக்க வேண்டாம் அத்தையை.”

‘ வேற எப்படிங்க பேச சொல்றீங்க? அவங்க என்னை விட்டதுனால தானே எனக்கு அப்படி ஒரு நிலை வந்துது. அவங்களுக்கு மகன்கள் தான் முக்கியம். இருந்திட்டு போகட்டும் மகன்கள் கூடவே..”

“இல்ல ஆனந்தி நீ ஒரு பெண்ணா உன் அம்மாவோட நிலைமையை கொஞ்சம் கூட உணரவே இல்லை. அன்னைக்கு நீ சின்ன பெண் உலகம் தெரியாம இருந்தப்ப யோசிச்சது வேற. ஆனா இப்பவும் அதே மாதிரி யோசிச்சா எப்படி?”

“என்னங்க பெரிய நிலைமை? அப்படி என்ன தப்பா யோசிச்சிட்டேன். கஷ்டத்திலேயும் பையனுங்களை காப்பாத்தனும்ன்னு நினைச்சவங்களுக்கு பெண்ணை நினைக்க தோனலையே?”

“ம்ம்ம்..நீ யோசிக்கிறது சரியே இல்லை. இங்க பையன் பொண்ணுன்னு வித்தியாசம் இல்ல ஆனந்தி. உங்க அம்மா படிக்காதவங்க அப்பாவோட சம்பாத்தியத்தில் குடும்பத்தை நடத்தி கிட்டு இருந்தவங்க திடீர்ன்னு அந்த வருமானம் நின்னு போனா என்ன செய்வாங்க சொல்லு. அடுத்து முடமாகி போன கணவரையும் பார்க்கணும், வைத்திய செலவு ஒரு பக்கம், மூணு குழந்தைகளையும் பார்க்கணும் ஒரு படிப்பறிவில்லாத அம்மாவால குடும்ப பாரம் முழுக்க எப்படி சுமக்க முடியும் . அந்த நேரத்தில் நீ மட்டும் தான் புரிஞ்சுக்கிற வயதில் இருந்தவ. அதனால உன்னை வேலைக்கு அனுப்புற முடிவுக்கு ஒத்து கிட்டு இருந்து இருப்பாங்க.ஆனா உன்னை அனுப்பிட்டு அவங்க நிம்மதியா இருந்து இருப்பாங்கன்னு நினைக்கிறியா? கண்டிப்பா இருக்காது ஒவ்வொரு நாளும் உன்னை நினைச்சு வருத்தப்பட்டு இருப்பாங்க. உங்க அம்மா ஒரு சூழ்நிலை கைதி தான் அவங்களுக்கு வேற வழி இல்லை.”

அவன் சொன்னதை கேட்டு திகைத்து போய் அமர்ந்திருந்தவள் அது நாள் வரை தன் அம்மாவின் கோணத்தில் இருந்து யோசிக்காமல் இருந்து இருக்கிறோமே என்று எண்ணி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.  நான் தப்பு பண்ணிட்டேங்க தப்பு பண்ணிட்டேன். ஆசை ஆசையா என்னை பார்க்க வந்தவங்களை விரட்டி விட்டுடேனேனே” என்று கதறினாள்.

Situational Prisoners tamil short story about tamil people mind set - Sudha Ravi's short story

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.