சற்றுமுன்

மவுனம்.......கவிஞர் கனிமொழியின் கவிதை.....

"பேசுவதை நிறுத்திக்கொண்டாய். உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது என்று நினைத்துவிட்டாயா? பேசிப் பேசி அலுத்து விட்டதா? சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா? உன் வார்த்தைகளின் எஜமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா? மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்... வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்...கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச் சென்றது யார்?
உன் சக்கர நாற்காலி உருளும் சத்தம்... வண்டியில் இருந்து இறங்கி, நீ வீசும் சினேகப் புன்னகை... அதற்குப் பின்னால், எப்போதும் ததும்பும் நகைச்சுவை... மேடையில் இருந்து, "உடன் பிறப்பே" என்று அழைக்கும்போது, ஒரு கோடி இதயங்கள் ஒரு வினாடி உறைந்து துடிக்குமே அந்தக் கணம்... இதற்கு மாற்றாய் எதைத் தருவாய், நாளை முதல் சூரியன் உதிக்காது என்றால், இந்தப் பூமி எப்படி சுழலும்.. எங்களது கேள்வியாய், தேடும் பதிலாய், சிந்தனையாய், சிந்தனை ஊற்றாய், மொழியாய், மொழியின் பொருளாய், செவிகளை நிறைத்த ஒலியாய், குரலாய் இருந்தது நீ. எங்களோடுதானே எப்போதும் இருப்பாய்... இருந்தாய், திடீர் என்று எழுந்துபோய் கதவடைத்துக் கொண்டால் எப்படி?
உனது நாவை எங்களுக்கு வாளாக வடித்துக் கொடுத்தாய். அதைப் புதுப்பொழிவு மாறாமல் பாதுகாத்து வைத்திருக்கிறோம். இருண்மையும் எதிரிகளும் சூழ்ந்த நேரத்தில், எங்கள் தோள்களின் மீது ஏறி படை நடத்திடக் காத்திருக்கிறோம்... நீயோ, போதி மரத்து புத்தனைப் போல் அமைதி காக்கிறாய்.
உன் ஆளுமையைத் துவேஷித்தவர்கள், வசை பாடியவர்கள், தமிழ் வாழ்வின் தாழ்வுகளுக்கெல்லாம் நீயே காரணம் என்றவர்கள் எல்லோரும் இன்று காத்துக்கிடக்கிறார்கள் எங்களோடு. புழுதிக் காற்று வீசும் திசையறியா காட்டில், தெளிந்து தடம் காட்டும் உனது சில வாக்கியங்களுக்காக.. நீ பேசுவதில்லை. ஆனால், நாங்கள் உன்னைப் பற்றியேதான் பேசிக்கொண்டிருக்கிறோம் வா. வழியெங்கும் பூத்துக் கிடக்கிறது, நீ வருவாய் என்ற நம்பிக்கை... நீயின்றி இயங்காது எம் உலகு"

a tamil poem of poet kanimozhi

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.