சற்றுமுன்

உடல் உறுதிக்கு உதவும் 10 பருப்புகள்

மார்க்கெட்டில் நம் கண்களில் பட்டும், பார்த்தும் பார்க்காமல் நாம் கடந்துபோகிற பல உணவுப் பொருட்கள் உள்ளன. அவற்றில் பருப்புகள், விதைகள், நட்ஸ் ஆகியவையும் அடங்கும். பருப்புகள் என்றால், நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து ஆகியவை அல்ல... முந்திரி, பாதாம் போன்றவை. இவற்றில் இருக்கும் சத்துக்கள் அளப்பரியவை. இவற்றை தினமும் உணவோடு அல்லது தனியாகச் சாப்பிட்டு வந்தால், எண்ணற்ற ஆரோக்கியப் பலன்களைப் பெறலாம். அப்படி நம் உடல் உறுதிக்கு உதவும் 10 பருப்புகள் மற்றும் நட்ஸ் இங்கே.

பாதாம் பருப்பு (Almond)
பாதாம் பருப்பு, வாதுமை மரத்தின் கொட்டை. ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தினமும் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். இதில் நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், ஜிங்க், மக்னீஸியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், இரும்பு மற்றும் வைட்டமின் B போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும்; இதய நோய்கள் வராமல் காக்கும்; மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும். சருமப் பாதுகாப்புக்கு உதவும்; ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்; செரிமானத்தை சீராக்கும்.

பிரேசில் நட்ஸ் (Brazil nuts)
இது டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும், பெரிய கடைகளிலும் கிடைக்கும். இதுவும் கொட்டை வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் இதன் காவி நிற வெளித் தோற்றத்தைப் பார்த்து பருப்பு என்றும் சொல்கிறார்கள். இது, புற்றுநோய், கல்லீரல் அரிப்பு, இதய நோய் மற்றும் வயதான தோற்றம் ஆகியவற்றைத் தடுக்கும். இதயத்தை பலப்படுத்தும், சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். ஆர்த்ரைடிஸ் (மூட்டு) வலிகளைக் குறைக்கும். சூரியக் கதிரிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். கெட்டக் கொழுப்பைக் குறைக்கும். ரத்தசோகையைத் தவிர்க்கும்.

முந்திரி
முந்திரியும் பருப்பு வகையைச் சேர்ந்ததல்ல. இது, சிறுநீரக வடிவில் முந்திரிப் பழத்தின் அடிப்பகுதியில் இருக்கும் கொட்டை. முந்திரியில் இருக்கும் பல வகையான சத்துக்கள் உடல் வலுவுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியவை. இது, கொழுப்பைக் குறைக்கும்; இரும்புச்சத்து தரும்; சர்க்கரைநோயைத் தடுக்கும்; கண் பார்வை, முடி வளர்ச்சி, சருமப் பாதுகாப்புக்கு நல்லது.

சியா விதைகள் (Chia seeds)
இதுவும் பெரிய கடைகளில் கிடைக்கக்கூடியது. தினமும் இதைச் சாப்பிட்டு வந்தால், மூட்டுவலி தீரும்; செரிமானத் திறன் அதிகரிக்கும்; உடல் எடை குறையும்; புத்துணர்ச்சியைக் கொடுத்து மூளைச் செயல்பாட்டுக்கு உதவும்; மனஅழுத்தத்தைக் குறைக்கும்; ஆர்த்ரைட்டீஸ், சர்க்கரைநோய், கல்லீரல் நோய், இதய நோய் ஆகியவற்றைத் தடுக்கும்.

ஆளி விதைகள் (Flax seeds)
இதில் இருக்கும் நார்ச்சத்து குடல் செயல்பாட்டை அதிகரிக்கும்; உடல் எடை குறைப்பதற்கு உதவும். கொழுப்பைக் குறைத்து, இதய நோயைத் தடுக்கும்; ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; புற்றுநோய் வருவதற்கான ஆபத்தையும் குறைக்கும்; உறுதியான உடல் மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு வழிவகுக்கும்.

தேவதாரு கொட்டை (Pine nuts)
தேவதாரு மரங்களின் கொட்டைகளையும் சாப்பிடலாம். தினசரி இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் இதன் உடைத்த நட்ஸ்களைச் சாப்பிடலாம். இது, இதயத்தைப் பலப்படுத்தும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்; ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும்; புத்துணர்வைக் கொடுக்கும்; பார்வைத்திறனை மேம்படுத்தும். இரும்புச்சத்தை அதிகரிக்கும்; களைப்பையும் சோர்வையும் போக்கும்.

பூசணிக்காய் விதைகள் (Pumpkin seeds)
தட்டையாகவும், நீள் உருண்டை வடிவிலும் இருக்கும் பூசணி விதைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்; மனஅழுத்தத்தைப் போக்கும்; ஆர்த்ரைட்டீஸ் வலிகளைக் குறைக்கும்; இதயத்தை வலுப்படுத்தும்; புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

எள்ளு விதை (Sesame seeds)
எள்ளு விதைகள் எண்ணெய் தயாரிப்புக்குத்தான் அதிகம் பயன்படுகின்றன. எளிதில் கெட்டுப்போகும் தன்மை இதற்கு இல்லை. இது, ரத்த அழுத்தத்தையும் கொழுப்பையும் குறைக்கும்; கல்லீரல் பாதிப்பைத் தடுக்கும்; ஆர்த்ரைட்டீஸ், ஆஸ்துமா, தலைவலி, ஆஸ்டியோபோரோசிஸ், புற்றுநோய் ஆகியவற்றில் இருந்து காக்கும். அதே நேரத்தில் அதிகமாகச் சாப்பிட்டால் தலைவலி, குடல்புண் ஆகியவை ஏற்படும்.

சூரியகாந்தி விதைகள் (Sunflower seeds)
சூரியகாந்தியிலிருந்து எடுக்கப்படும் இந்த விதைகளில் வைட்டமின் இ நிறைந்துள்ளது. இது கொழுப்பைக் குறைக்கும் தன்மைகொண்டது. தினமும் இதைச் சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், தலைவலி, மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும். ஒரு நாளைக்கு கால் கப் (சிறிய கப்பில்) சாப்பிடலாம்.

வால்நட் (Walnut)
தினமும் ஏழு வால்நட் சாப்பிட்டு வந்தால், பலவகைப் பலன்களைப் பெறலாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம்; ரத்த அழுத்தம் குறையும்; கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்; உடல் எடை குறையும்; மூளை புத்துணர்ச்சியோடு, சுறுசுறுப்பாக இருக்கும். இது, ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்; சருமப் பளபளப்புக்கும், முடி ஆரோக்கியத்துக்கும் உதவும்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.