எதோடு எதைச் சாப்பிடக் கூடாது, எதோடு சாப்பிடலாம் என்பதைத் தெரிந்துகொள்வது இன்றைய அவசியத் தேவை. நம் ஊர் தலைவாழை இலை விருந்து, சொட்டுப் பாயாசத்தில் ஆரம்பித்து மோரில் வந்து முடியும். சாப்பிட்டு முடிந்ததும் வெற்றிலை, பாக்கு உபசரிப்பு நடக்கும்... அது செரிமானம் சீராக நடைபெறுவதற்கு! எல்லாவற்றையும் காரண, காரியத்தோடு செய்தது நம் பாரம்பர்யம்.
வாழை இலையில் ரசத்துக்குப் பின் பாயசம் பரிமாறப்படுவதுகூட நம் உடல், உணவை ஜீரணத்துக்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு, அதற்கு ஆகும் சக்தி ஆகியவற்றைக் கணக்கில்கொண்டுதான் என்பார்கள் நம் முன்னோர்கள். உணவை முறையாகச் சாப்பிடுவது இருக்கட்டும்... எதோடு எதை சாப்பிடக் கூடாது என்பதையே பலருக்கும் நாம் கற்றுத்தரவேண்டி இருக்கிறது. உதாரணமாக, `இரவில் கீரை சாப்பிடக் கூடாது’, `மது அருந்தியவர்கள் அகத்திக்கீரை சாப்பிடக் கூடாது’... என ஏ.டி.எம் வாசலில் நிற்கிற கூட்டம் மாதிரி நீள்கிற பெரும் பட்டியலே இருக்கிறது. ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும்கூட ஒன்றுக்கொன்று ஒப்புக்கொள்ளாத உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் அபாயகரமானவை.
நம் பாரம்பர்ய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதம், சாப்பிடும் நேரம், இடம், அளவு, தரம், தயாரிக்கப்பட்ட முறை எல்லாவற்றையும் கணக்கில்கொண்டு `இந்த உணவை இதனோடு சேர்த்து உண்ணக் கூடாது... இதை இந்த அளவுதான் சாப்பிட வேண்டும்... என்று சில விதிகளையே சொல்கிறது. அப்படி ஆயுர்வேதம் சொல்லும் நம் உடலுக்கு ஒவ்வாத ஒன்றோடு ஒன்று சேரக் கூடாத உணவுப் பழக்கங்கள் சில...
* `ராத்திரி ஒரு டம்ளர் பால் குடிச்சாத்தான் எனக்கு நிறைவாக இருக்கும்’ என்பார்கள் சிலர். ரொம்பச் சரி. ஆனால், தவறான உணவுகளுடன் சேர்த்து அதை அருந்தும்போது, பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும். பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதவை... பழங்கள், இறைச்சி, தேங்காய், வால்நட், யோகர்ட், முட்டை, கொள்ளு, பருப்புகள், காய்கறிகள். பாலோடு இவை சேரும்போது, செரிமானத்துக்கான நொதிகளுக்கு (Enzymes) தொந்தரவைத் தந்து, பல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.
* அதேபோல முள்ளங்கி, பூண்டு, கீரைகள், முருங்கைக்காய் இவற்றால் தயாரான உணவுகளைச் சாப்பிட்ட பிறகு பாலைக் குடிக்கவே கூடாது. அது மிக மோசமான தோல் வியாதிகளுக்கு வழிவகுத்துவிடும். லூகோடெர்மா எனப்படும் வெண்குஷ்டம், வெண் புள்ளிகள், தோல் தடித்து அரிப்பு ஏற்படுதல் (Urticaria), சொறி, தோல் நிறம் மாறுதல் எனப் பல நோய்களைக் கொண்டு வந்துவிடும்... எச்சரிக்கை!
* பால், தயிர் இவை தவிர நாம் சாப்பிடும் வழக்கமான சாப்பாடு... இவற்றோடு பழங்களைச் சேர்த்து உண்பது தவறு. பழங்கள் மிகச் சிறந்த உணவுகள்; மறுப்பதற்கில்லை. ஆனால், பழங்களை தனி உணவாகத்தான் சாப்பிட வேண்டுமே தவிர, எதனோடும் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இப்படி ஒவ்வாத உணவுகளுடன் பழத்தைச் சாப்பிட்டால், அது நம் ஜீரண மண்டலத்தை பலவீனமாக்கும்; உடலில் கபம், பித்தம் ஏற்பட வழிவகுக்கும்.
* ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் நெய்... இரண்டையும் சேர்த்து உண்பது சரியா? தவறு. சம அளவுள்ள தேனும் நெய்யும் சேர்ந்தால் அது விஷம். தேவைப்படும்போது, கொஞ்சம் அதிகமாக தேன், குறைவாக நெய் அல்லது கொஞ்சம் குறைவாக தேன், அதிகமாக நெய் எனக் கலந்து சாப்பிட வேண்டும்.
* தேனை சூடுபடுத்தவோ, வேகவைக்கவோ, சமைக்கவோ பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது தன் தன்மையை இழந்து பாழாகி, நச்சுப்பொருளாகிவிடும். அதேபோல, காலையில் தேனை வெந்நீரோடு சேர்த்து அருந்துவதைத் தவிர்ப்பதும் நல்லது.
* பால், யோகர்ட், வெள்ளரி, தக்காளி இவற்றோடு எலுமிச்சையைச் சேர்த்துச் சாப்பிடுவது தவறான பழக்கம். இது அசிடிட்டிக்கு வழிவகுத்து, வயிற்றுப் பிரச்னையை உண்டாக்கிவிடும்.
ஒரே நாளில் சிக்கனும், பன்றி இறைச்சியும் சாப்பிடலாமா? கூடவே கூடாது. இரண்டையும் சாப்பிட்டால், அது குடலுக்கு அழுத்தம் கொடுத்து, பல்வேறு நச்சுக்களை உருவாக்கிவிடும். நம் உடலின் வளர்சிதை மாற்றத்தையே பாதிக்கும் அளவுக்கு அபாயகரமான விளைவுகள் ஏற்படக்கூடும்.
* இரவில் நம் உடலின் ஜீரண மண்டலம் மிகவும் சோர்வாக இருக்கும். எனவே, இரவில் தயிரையோ, மோரையோ சாப்பிடுவது தவறு. அதேபோல தயிரைச் சுடவைத்துப் பயன்படுத்துவதும் தவறு. இது பல்வேறுவிதமான செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பல்வேறுவிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் உண்டாக்கிவிடும்.
* இறைச்சியோடு தேன் மற்றும் வேகவைத்த முள்ளங்கி, கறுப்பு உளுந்து, முளைகட்டிய பயறு வகைகளைச் சேர்த்துச் சாப்பிடுவது தவறு. ஏனென்றால், இவற்றில் இருக்கும் துணைப்பொருட்கள் (இவற்றை ’விதாஹி’ என்கிறது ஆயுர்வேதம்) வயிற்றுப் பொருமல், நெஞ்செரிச்சல் ஆகியவற்றை உண்டாக்கும். அதன் காரணமாக அஜீரணம், குமட்டல், வாந்தி, படபடப்பு ஆகியவையும் உண்டாகலாம்.
* பலாப்பழம், முள்ளங்கி ஆகியவற்றை கறுப்பு உளுந்தில் தயாரான உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
* வாழைப்பழம்-மோர், தயிர்-பேரீச்சம்பழம், பால்-மதுபானம்... இந்தக் கூட்டணிகள் ஆகாதவை. இந்தத் தவறான சேர்க்கை, நம் உடலில் கபத்தை உருவாக்கிவிடும். அதன் காரணமாக வெகு எளிதாக மூச்சுத்திணறல் குறைபாடுகளை உண்டாக்கிவிடும்.
* 10 நாட்களுக்கு மேல் நெய்யை வெண்கலப் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாவிலோ வைத்திருந்தால் அது நச்சுப் பொருளாகிவிடும். நெய்யை வைத்துப் பயன்படுத்த எவர்சில்வர் மற்றும் கண்ணாடிப் பாத்திரங்களே மேலானவை.
* சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் கலப்பது தவறு. உதாரணமாக சமைத்த சாதத்துடன் சாலட் சேர்த்துச் சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு உண்டாகும்.
எதை எதோடு சாப்பிடக் கூடாது என்பதை மனதில் பதியவைத்துக்கொள்வோம். பக்கவிளைவுகளைத் தவிர்ப்போம்! உடல்நலம் பேணுவோம்!